காட்டுப்பன்றியை வயிறு புடைக்க சாப்பிட்ட புலி.. கதிகலங்கிய கூடலூர்.. நீலகிரியில் அடுத்தடுத்த பயங்கரம்
ஊட்டி: நீலகிரியில் 2 புலிகள் உயிரிழந்திருக்கும் சம்பவம் மிகப்பெரிய கிலியை மாவட்ட மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.. இந்த புலிகள் எப்படி இறந்தன என்று உறுதியாக தெரியவில்லை.. விசாரணைகளும், ஆய்வுகளும், பரிசோதனைகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, அடர்ந்த வனங்கள் சூழ்ந்த இடமாகும்.. அதனால் யானை, புலி, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நிறையவே மலை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றன. சில நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது இந்த விலங்குகள் ஊருக்குள்ளும் நுழைந்து விடுகின்றன.

இதில் ஊருக்குள் பெரும்பாலும் நுழைவது கரடிகளாகவே உள்ளன.. இதற்கு அடுத்தபடியாக பைசன் எனப்படும் காட்டெருமைகளும் சாலைகளில் அடிக்கடி உலாவரும். அதேபோல, புலிகள் உயிரிழப்பது என்பது சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. அதிலும், உடம்பில் காயங்கள் ஏற்பட்டு மரணிப்பது தொடர்கதையாகிவிட்டது.
தனியார் தோட்டம்: நேற்றுகூட,கூடலூர் அருகே 2 புலிகள் இறந்து கிடந்துள்ளன.. இங்குள்ள பிதர்காடு பகுதியில், சசக்ஸ் என்ற இடத்துக்கு பக்கத்தில், தனியார் தோட்டம் ஒன்று உள்ளது.. இந்த தோட்டத்தில், புலி குட்டி இறந்து கிடப்பதை பார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தந்தார்கள்.
இதனால், வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் விரைந்து சென்று சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இறந்துபோன புலிக்குட்டிக்கு 2 வயதுதான் இருக்குமாம்.. எனவே, சுற்றுவட்டாரத்தில் தாய்ப்புலி இருக்குமோ என்று தேடுதல் வேட்டையை துவங்கினர். ஆனால், குட்டிப்புலி விழுந்து கிடந்த இடத்திலிருந்து, 75 மீட்டர் தூரத்தில் 8 வயது பெண் புலியின் சடலமும் கிடந்துள்ளது.
போஸ்ட் மார்ட்டம்: 2 புலிகளின் உடம்பிலும் காயங்கள் நிறைய இருந்தன.. இதையடுத்து, வனத்துறையினர் 2 புலிகளின் உடல்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்தனர். பிறகு, உறுப்புகளை ரசாயன பரிசோதனைக்காக சேகரித்தனர்.. இறுதியில், இறந்த புலிகளின் உடல்களை அதே பகுதியில் எரியூட்டி அழித்தனர்.
பிறகு இதுகுறித்து வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் பிரபு சொல்லும்போது, "இறந்து போன புலிகள் தாய் மற்றும் குட்டியாக இருக்கலாம். புலிகளின் உடல்களில் காயங்கள் இருந்தன. ஆண் புலி ஒன்று இணை சேர்க்கைக்காக, குட்டியை முதலில் கொன்றுவிட்டு, அதற்கு பிறகு தாயை தொந்தரவு செய்திருக்கலாம்.. இதனால் ஏற்பட்ட சண்டையில் தாய்ப்புலி பலத்த காயமடைந்து இறந்திருக்கலாம்.. ஆனாலும், உறுதியாக தெரியவில்லை..
ஆய்வுகள் ஆரம்பம்: எனவே, புலிகள் இறந்தது குறித்து விசாரணை செய்ய 2 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.. அவர்கள் அந்த பகுதி முழுவதும் ஆய்வு செய்ய துவங்கியிருக்கிறார்கள்.. இதற்கு பிறகுதான் புலிகள் இறப்புக்கு உண்மையான காரணம் தெரியவரும்" என்றார்கள்.
இதற்கு பிறகு, இதுகுறித்த முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில், கூடலூர் வனக்கோட்ட அதிகாரிகள் சொல்லும்போது, "200 மீட்டர் தொலைவில் காட்டுப்பன்றியின் உடல் பாகங்கள் கிடந்தன.
விஷம் வைக்கப்பட்ட உணவை காட்டுப்பன்றிகள் சாப்பிட்டு இறந்திருக்கலாம்.. அந்த காட்டுப்பன்றிகளை புலிகள் சாப்பிட்டிருக்கலாம்.. விஷமுள்ள காட்டுப்பன்றியின் உடலை தின்ற இந்த இரண்டு புலிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு, துடித்து இறந்திருக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. எனினும், முழுமையான காரணத்தை கண்டறிய அனைத்து வகையிலும் தொடர்ந்து விசாரணையும் ஆய்வும் மேற்கொண்டு வருகிறோம்" என்றனர் .
எப்படி வந்தன: ஆனால், இரண்டு புலிகளின் சடலங்களையும் கால்நடை மருத்துவர்கள் போஸ்ட் மார்ட்டம் செய்தபோது, காட்டுப்பன்றியின் எச்சங்கள் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்..
அதேபோல, புலிகளின் உள்ளுறுப்புகளை ஆய்வு நடத்தியபோது, அவற்றின் உட்புற உறுப்புகளும் சேதமடைந்திருக்கிறதாம். விஷம் அருந்திய காட்டுப்பன்றியை சாப்பிட்டதால், இப்படி உறுப்புகள் சேதமடைந்திருக்கலாம் என்கிறார்கள். அதேபோல, காட்டுப்பன்றியின் உள்ளுறுப்புகளும் தற்போது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கான சோதனையும் நடந்து கொண்டிருக்கின்றன.
இணை சேர்க்கைக்காக, இந்த புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது இறந்த காட்டுப்பன்றியின் உடலை தின்றதால் 2 புலிகளும் இறந்திருக்கலாம் என இருவிதமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. எனினும், தொடர் விசாரணை நடந்து வரும்நிலையில், தோட்டப்பகுதிக்குள் புலிகள் எப்படி வந்தன? என்ற கலக்கம் கூடலூர் மக்களை கவ்விக் கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications