பாரீஸில் உதயநிதி ஸ்டாலின்! ஒலிம்பிக் போட்டிகளை காண நேரில் விசிட்.. கூடவே போன முக்கிய அதிகாரிகள்!
பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் கண்டு ரசிப்பதற்காகவும், தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காகவும் பாரீஸ் சென்றுள்ளார் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட உதயநிதி பாரீஸ் சென்றடைந்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் 33 வது ஒலிம்பிக் போட்டிகளை காண தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நள்ளிரவில் விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டார். அவருடன் தமிழக விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோரும் சென்றுள்ளனர்.

உலகத்தின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் மொத்தம் 117 வீரர்கள் பங்கேற்க சென்றுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டில் இருந்து 11 வீரர், வீராங்கனைகள், 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 17 பேர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் 1.19 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செய்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான், தமிழக வீரர் வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் சென்றுள்ளார். தமிழக வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட்டு வீரர்களை ஊக்கப்படுத்த உள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அங்கு 4 நாட்கள் தங்கி இருந்து ஒலிம்பிக் போட்டிகளைக் காணும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வரும் 14 ஆம் தேதி பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவில் பங்கேற்பார் என்றும் தெரிகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் உடனான ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்றார் உதயநிதி ஸ்டாலின். நேற்று சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணியிலும் பங்கேற்றிருந்தார்.












Click it and Unblock the Notifications