33ஆவது ஒலிம்பிக் போட்டிகள்! பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக இன்று தொடக்கம்
பாரிஸ்: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகின்றன. இன்று போட்டிகள் தொடங்கும் நிலையில் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்களுக்கு நடக்கிறது.
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பாரிஸில் நடைபெறுகிறது. இது 33வது ஒலிம்பிக் போட்டியாகும். இந்த போட்டி பல வரலாற்று நிகழ்வுகளுடன் தொடங்கியுள்ளது. அதாவது ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்த போட்டியில்தான் ஆண் வீரர்களும், பெண் வீராங்கனைகளும் சம அளவில் பங்கேற்றுள்ளனர். அதாவது மொத்தம் 10,500 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றிருக்கின்றனர். இதில் வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் உள்ளனர்.

ஏற்கெனவே கடந்த 124 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பாரிசிஸ் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் முதல் முறையாக பெண்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
போட்டிகளை காண லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே பாதுகாப்பு பணிகளுக்காக பிரான்ஸ் போலீஸ் மட்டுமல்லாது, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்புப்படையினர், போலீசார், சிறப்பு அதிரடி படையினர் என மொத்தமாக 40,000 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
இன்று தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எனவே பாரிஸ் வான் பரப்பில் 150 கி.மீ பரப்பளவுக்கு விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது மற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தொடக்க நிகழ்ச்சிகள் மைதானத்திற்குள்தான் நடைபெறும். இதில், மைதானத்திற்கு வெளியே பிரபல நதியான 'சென்' நதிக்கரையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் கப்பல்கள் மற்றும் படகுகளில் அணிவகுக்கின்றன.
முன்னதாக ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கியது. ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் கிரீஸில் இருந்து சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், தற்போது இறுதிக்கட்டமாக பாரீஸ் நகரங்களில் வலம் வருகிறது. இந்த ஒலிம்பிக் ஜோதி இன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இணைந்து அந்த ஜோதி ஓட்டம் நிறைவுபெறும். இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டு போட்டி நடைபெறும் 17 நாள்களும் அந்த பிரம்மாண்ட தீபம் அணையாமல் எரியும்.
இந்த ஆண்டு துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், ஈட்டி எறிதல், மல்யுத்தம், பேட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி, தடகளம் என 16 போட்டிகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருக்கின்றனர். கடந்த 2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றிருந்தது. இந்த போட்டியில் இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை வெல்ல வீரர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications