நாறும் "காதல் நகரம்.." எங்கு பார்த்தாலும் குப்பைகள்! சாலைகளில் சுற்றும் எலிகள்! பாரீஸுக்கு என்னாச்சு
காதலர்களின் நகரமாக அறியப்படும் பாரீஸ் இப்போது முக்கிய பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.
பாரீஸ்: பாரீஸ் முழுக்க இப்போது குப்பைகள் தேங்கியிருக்கிறது. இதனால் அங்குக் கடுமையான துர்நாற்றம் வீசும் நிலையில், சுகாதார சீர்கேடும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
ஐரோப்பாவில் உள்ள பாரீஸ், உலகளவில் காதலர்களின் நகரமாக அறியப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் அங்குள்ள ஈபிள் டவர், சர்வதேச அளவில் பல பார்வையாளர்களை ஈர்க்கிறது.
இதனிடையே பாரீஸ் இப்போது புது வித பிரச்சினையை எதிர்கொண்டு இருக்கிறது. இதனால் அந்நாட்டில் இருக்கும் அனைத்து சாலைகளிலும் குப்பைகள் மலை போலத் தேங்கி, மிகப் பெரிய சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாரீஸ்
உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரை அமைந்துள்ள பாரீஸ் நகருக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் குவிந்து வருகின்றனர். அதேபோல காதலர்களின் நகராக அறியப்படும் பாரீசுக்கு, உலகளவில் இருந்தும் காதலர்கள் படையெடுத்து வருகின்றனர். கொரோனா சமயத்தில் இதுபோல வெளிநாடுகளில் இருந்து வருவோரின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும் இப்போதும் மீண்டும் அது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனிடையே இப்போது பாரீஸ் புதுவித பிரச்சினையை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.

புது பிரச்சினை
இதனால் சாலைகளில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலகளவில் கவனிக்கப்படும் பாரீஸ் முழுக்க குப்பைகள் தேங்கியிருக்கும் நிலையில், அங்குக் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அங்குள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளதே இதற்குக் காரணமாகும். ஓய்வூதிய திட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்கு எதிராகத் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

பல ஆயிரம் டன் குப்பைகள்
இதனால் டன் கணக்கில் துர்நாற்றம் வீசும் குப்பைகள் பாரீஸின் தெருக்களில் குவிந்துள்ளன. துப்புரவுத் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வயதை 62இல் இருந்து 64 ஆக உயர்த்தும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துப்புரவுத் தொழிலாளர்கள் மார்ச் 6 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாரீஸ் நகர் முழுக்க குப்பைகளால் நிரம்பியுள்ளன. முக்கிய சாலைகளில் ஆள் அளவுக்குக் குப்பைகள் தேங்கியுள்ளன. சுமார் 5600 டன் குப்பைகள் சேகரிக்கப்படாமல் குவிந்துள்ளன.

சுகாதார சீர்கேடு
மூன்று குப்பை சுத்திகரிப்பு தளங்கள் முழுமையாகவும் நான்காவது தளம் பகுதியாகவும் மூடப்பட்டுள்ளது. இது முகம் சுளிக்க வைப்பது மட்டுமின்றி பாரீஸ் மக்களின் உடல்நிலையை ஆபத்தில் தள்ளியுள்ளது. குப்பைகள் குவிந்துள்ளதால் எலிகள் அங்குப் படையெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து பாரீஸ் மக்கள் கூறுகையில், "இப்போது நகர் முழுக்க அழுக்காக இருக்கிறது.. நகரில் குவிந்திருக்கும் குப்பைகள் எலிகளையும் கரப்பான் பூச்சிகளையும் ஈர்க்கிறது. குப்பைகள் குவிந்துள்ளது எலிகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மக்கள் கோரிக்கை
அவை சுதந்திரமாகக் குப்பைகள் மத்தியில் சுற்றுகிறது.. இனப்பெருக்கம் செய்து, சாலைகளிலேயே சிறுநீர் கழிவுகளைப் போட்டுவிடுகிறது. இது மிக மோசமான சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது" என்றார். இதன் காரணமாக உலகின் காதலர் நகரமாக அறியப்பட்ட பாரீஸ் இப்போது குப்பை நகரமாக மாறியுள்ளது. அங்கு எல்லா பகுதிகளிலும் நிரம்பியுள்ள குப்பைகளின் படங்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. குப்பைகளை அகற்ற அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

போராட்டம்
பாரீஸ் மட்டுமின்றி, ரென்ஸ், லீ ஹவ்ரே மற்றும் நான்டெஸ், ரென்ஸ் போன்ற நகரங்களும் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு அரசு சட்டத்தில் கொண்டு வந்துள்ள மாற்றம், துப்புரவுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும். கடினமான பணிச்சூழல் நிலவும் நிலையில், ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் அதிகரித்துள்ளதைத் துப்புரவுப் பணியாளர்கள் ஏற்கவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் போராட்டத்தில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications