2024க்கு "ரெட் சிக்னல்".. நிதிஷ் இல்லாமல் திணறிய பாஜக.. பீகாரில் பெரும் பின்னடைவு.. கவனிச்சீங்களா?
பாட்னா: பீகாரில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒன்றில் பாஜக வென்றுள்ளது. ஒன்றில் ராஷ்டிரிய ஜனதா தளம் வென்றுள்ளது.
இதில் பாஜக ஒன்றில் வென்று இருந்தாலும், இந்த இடைத்தேர்தல் அந்த கட்சிக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி என்றுதான் கூற வேண்டும். பீகாரில் பாஜக சுதாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
பீகாரில் மோகமா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த ஆனந்த் குமார் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஏகே 47 இவரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட வழக்கில் இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பீகார் சட்டசபை தேர்தல்
இதையடுத்து அங்கு சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அவரின் மனைவி நீலம் தேவி களமிறக்கப்பட்டார். கடந்த முறை ஆனந்த் குமார் சிங்கை எதிர்த்து பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை அங்கு கூட்டணி மாறி உள்ளது. அங்கு ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்து உள்ளது. அதோடு ஆளும் கூட்டணியில் இருந்தும் பாஜக வெளியேற்றப்பட்டு உள்ளது.

4 முறை பாஜக
இன்னொரு பக்கம் கோபால்கஞ்ச் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு வரிசையாக 4 முறை பாஜக சார்பாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட சுபாஷ் சிங் கடந்த ஆகஸ்ட் மாதம் பலியானார். இதையடுத்து அவரின் மனைவி குஷன் தேவி இங்கே களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக மோகன் பிரசாத் குப்தா களமிறக்கப்பட்டார். இங்கே பாஜக வேட்பாளர் குஷன் தேவி வென்றுள்ளார்.

ரெட் சிக்னல்
ஆனால் இந்த வெற்றியும் ஒரு வகையில் பாஜகவிற்கு ரெட் சிக்னல்தான். ஏனென்றால் கடந்த முறை 2020 தேர்தலில் இங்கே பாஜக சுபாஷ் சிங் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால் இந்த முறை பாஜக அங்கு 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றுள்ளது. அந்த அளவிற்கு அந்த கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது . இந்த தொகுதி பாஜகவின் கோட்டை ஆகும். இங்கு மிகப்பெரிய வாக்கு வங்கி சரிவை அக்கட்சி சந்தித்து உள்ளது.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறிய முதல் தேர்தலிலேயே பாஜகவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து உள்ளது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. இதில்தான் பாஜகவிற்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு உள்ளது. இரண்டில் ஒரு தொகுதியில் தோல்வி, ஒன்றில் மிக குறைந்த வாக்கு விகிதம் என்று பாஜக கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளது.












Click it and Unblock the Notifications