சதி.. சபதம்.. சாதித்த நிதீஷ்! “ஸ்கெட்ச்” போட்டு தூக்கப்பட்ட சின்ஹா - பாஜக கூட்டணி உடைய காரணம் இவராம்
பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி அரசு இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க இருக்கும் சூழலில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி உடைய முக்கிய காரணமாக இருந்தவரை பழிவாங்கியுள்ளார் நிதீஷ் குமார்.
2017 ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக ஆதரவோடு ஆட்சியை தொடர்ந்த நிதீஷ் குமார், 2020 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 45 இடங்களில் மட்டுமே வென்றது.
பாஜக 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மறுபக்கம் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 79 இடங்களில் வென்று அதிர்ச்சி கொடுத்தது. ஆனாலும் நிதீஷ் குமாரை முதலமைச்சராக்கி கூட்டணியில் அங்கம் வகித்தது பாஜக.

சபாநாயகர்
ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைவிட அதிக இடங்களில் வென்றதால் பீகார் அரசில் அதிகாரத்தை கையில் எடுத்து தன்னிச்சையாக பாஜக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதேபோல், பாஜகவை சேர்ந்த சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ஆளும் கட்சிக்கு எதிராகவே கேள்வி எழுப்பியதால் நிதீஷ் குமார் கட்சி அதிருப்தியில் இருந்து வந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை.

புறக்கணிப்பு
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் நிதீஷ் குமார் பங்கேற்க மறுத்த பின்னர் கூட்டணி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. ஒரே மாதத்தில் பிரதமரின் 2 நிகழ்ச்சிகளை நிதீஷ் குமார் புறக்கணித்த நிலையில்தான் இருகட்சிகள் இடையேயே மோதல் வெட்டவெளிச்சமானது. இதனை தொடர்ந்து எம்.பி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நிதீஷ் குமார்.

பதவியேற்பு
இனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க முன்வந்தன. இதனை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை விட்டு விலகிய நிதீஷ் குமார் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்த நிலையில் பீகாரில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளை கொண்டு மகாத்பந்தன் கூட்டணி இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறது. இதற்கு முன்னதாக காலையிலேயே ஆர்.ஜே.யின் 2 மூத்த தலைவர்கள் வீடுகளில் சிபிஐ சோதனையை தொடங்கியது.

சபாநாயகர் ராஜினாமா
இந்த நிலையில், பீகார் சட்டமன்ற சபாநாயகராக பதவி வகித்து வரும் பாஜகவின் விஜய் குமார் சின்ஹா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அவருக்கு எதிராகவும் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை எம்.எல்.ஏக்கள் கொண்டு வந்தனர். இதனை வாசித்த சபாநாயகர் 9ல் 8 கடிதங்கள் விதிகளுக்கு உட்பட்டு தெளிவாக இல்லை என்று கூறி ராஜினாமா செய்ய மறுத்தார்.

நிதீஷ் குமாரின் பிளான்
இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ராஜினாமா செய்ய சம்மதித்தார். பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பிறகு சபாநாயகர் மாற்றப்படும் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே விஜய் குமார் சின்ஹாவை சபாநாயகர் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்று நிதீஷ் குமார் போட்ட சபதத்தை இன்று சாதித்து காட்டியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications