பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்றே ராஜினாமா.. பாஜக ஆதரவோடு நாளை மீண்டும் பதவியேற்பு! பரபர தகவல்
பாட்னா: பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அதன்பிறகு நாளை மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் பரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகார்.. இந்த ஆண்டு தொடங்கியது முதலே அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மாநிலம். இதற்கு காரணம் அந்த மாநிலத்தின் முதல்வராக உள்ள நிதிஷ் குமார் தான். பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த 2022 முதல் இந்த கூட்டணியை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றனர். நிதிஷ் குமார் முதல்வராக உள்ள நிலையில, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருக்கிறார். இந்நிலையில் தான் பீகார் அரசியல் நிலவரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாற தொடங்கியது.
அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த ‛இந்தியா' கூட்டணியால் குழப்பம் தொடங்கியது. இந்த கூட்டணி அமைய பெரும் பங்கு வகித்த நிதிஷ் குமாரை ‛இந்தியா' கூட்டணி பிரதமர் வேட்பாளராகவும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்க மறுத்தது. இதனால் கோபத்தின் உச்சிக்கே நிதிஷ் குமார் சென்றார்.
இதையடுத்து தான் கடந்த சில நாட்களாக நிதிஷ் குமார் மீண்டும் பாஜக பக்கம் சாய்ந்துள்ளார். இதனால் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கூட்டணியை கைவிட்டுவிட்டு பாஜகவுடன் இணைந்து பீகாரில் ஆட்சியை பிடிக்க நிதிஷ் குமார் திட்டமிட்டார். அதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க அவர் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை என்பது நிதிஷ் குமார் மற்றும் பாஜக மேலிடம் இடையே நடந்தது. இதற்கு பாஜக மேலிடம் பச்சைக்கொடி காட்டி உள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணிக்கு நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். ஆளுநர் மாளிகைக்கு செல்லும் நிதிஷ் குமார் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளார்.
அதன்பிறகு அதேவேளையில் பீகாரில் மீண்டும் ஆட்சியமைக்கவும் அவர் உரிமை கோர உள்ளார். பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு மற்றும் தனது கட்சியின் எம்எல்ஏக்களின் ஆதரவை சுட்டிக்காட்டி ஆட்சியமைப்பதற்கான கடிதத்தை அவர் வழங்குவேதாடு, மீண்டும் நாளை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக பீகார் மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
பாஜக 74 தொகுதிகளிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும் வென்ற நிலையில் இருகட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. பாஜக அதிக இடங்களில் வென்றாலும் கூட முதல்வர் பொறுப்பு நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. அவர் முதல்வராக பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வென்று பின்தங்கியது.
ஆனால் கடந்த 2022ம் ஆண்டில் பாஜக நிதிஷ் குமாரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற நினைத்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தான் நிதிஷ் குமார் பாஜகவுக்கு முழுக்கு போட்டு ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் உதவியுடன் ஆட்சியை பிடித்து மீண்டும் முதல்வரானார். ஆனால் இப்போது இந்த கூட்டணியும் கசந்துள்ளதால் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவிடம் தஞ்சமடைந்து மீண்டும் முதல்வர் பதவியை நாளை எட்டிபிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications