முதல்வர் பதவி பாஜகவுக்கு தானா? விட்டுக்கொடுக்கும் நிதிஷ் குமார் ? எக்ஸ் பதிவால் கிளம்பிய விவாதம்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேவேளையில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில் தான் நிதிஷ் குமார் முதல்வராக தொடர்வார் என்று அவரது ஜேடியூ கட்சி போட்ட எக்ஸ் பக்க பதிவு திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. இதனால் பீகார் முதல்வர் பதவி பாஜக வசம் செல்கிறதா? என்ற விவாதம் கிளம்பி உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இங்கு மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
பாஜக கூட்டணியில் பாஜக 89 தொகுதி, நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மாறாக ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த 2 கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது.
முன்னதாக இன்று காலை முதலே பாஜக கூட்டணி தான் முன்னிலையில் இருந்து வந்தது. இதையடுத்து இன்று காலையில் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு செய்யப்பட்டது.
அதில், ‛‛ அனைவருக்கும் முன்னோடி.. ஈடு இணையற்றவர்.. பீகார் முதல்வராக நிதிஷ் குமார் இருந்தார். இருக்கிறார். தொடர்ந்து முதல்வர் பதவியில் இருப்பார்'' என்று பதிவு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் நிதிஷ் குமார் தான் முதல்வராவார் என நினைத்து அவரது கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் இந்த பதிவு டெலிட் செய்யப்பட்டது.
இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. பீகார் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறினாலும் கூட நிதிஷ் குமாரின் ஜனதாதளம் கட்சி கடந்த முறையை இந்த தடவை சுமார் 40க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இப்படி இருக்கும்போது இந்த பதிவு டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதனால் நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் நிதிஷ் குமார் முதல்வர் பதவி இல்லையா? என்று கேள்வி கேட்டுள்ளனர். இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.
பீகாரை எடுத்து கொண்டால் கடந்த முறை பாஜக அதிக எம்எல்ஏக்களை வைத்திருந்தாலும் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்தது. இந்த முறை எப்படியாவது முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் தற்போது நிதிஷ் குமார் கட்சி அவர் முதல்வராக தொடர்வார் என்று போட்ட எக்ஸ் பதிவை டெலிட் செய்திருப்பது விவாதத்தை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications