காங்கிரஸை துவைத்த MO-NI மேஜிக்! ஆர்ஜேடியை கேட்க ஆளே இல்ல! நிதிஷ் சாதித்ததும்.. தேஜஸ்வி சறுக்கியதும்!
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் மீண்டும் ஒருமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி அங்கு 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள நிலையில், ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி வெறும் 30 இடங்களுக்குள் சுருக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் பின்னணியில் MO-NI மேஜிக் எனப்படும் நிதிஷ் குமார் - நரேந்திர மோடியின் அரசியல் சாதுர்யமும், பெண்கள் சக்தியும் தான் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பீகாரில் 243 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதுவரை அந்த மாநிலம் காணாத அளவுக்கு, 66.91% என்ற வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு இடம்பெற்றது. முதல்கட்டத்தில் 65% வாக்குகளும், இரண்டாம் கட்டத்தில் 67% வாக்குகளும் பதிவானது.

இத்தகைய அதிக வாக்குப்பதிவு பொதுவாக ஆட்சிக்கு எதிரான அலையை குறிக்கும் என்ற நிலை இருந்தாலும், பீகாரி அதற்கு எதிர்மாறாக 'மோநி' அலையே உருவானது. நிதிஷ் குமாரின் 20 வருட ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கான சைக்கிள் திட்டம், நிதி உதவி என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பீகார் தேர்தல் முடிவுகள்
அதற்கு நன்றிக் கடன் செலுத்துவது போலவே இந்த தேர்தலிலும் பெண்கள் சாதனை வாக்குப்பதிவு செய்தனர். முதல்கட்ட தேர்தலில் பெண்கள் வாக்கு சதவீதம் 69% இருந்தது; இரண்டாம் கட்டத்தில் இது 74% ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஆண்களை விட 4.3 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்தது முக்கிய அரசியல் திருப்பங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த பெண்களின் வாக்குகள் என்டிஏ கூட்டணிக்கே பெரும்பாலும் சென்றுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் பீகாரில் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒரு பெண்ணுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டது.
பெண்கள் வாக்கு சக்தி
மேலும், திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மேலும் ரூ.2 லட்சம் வரை உதவி வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் அறிவித்தார். இந்த அறிவிப்பு தேர்தலுக்கு முன் பெண்களை நோக்கி விட்ட பெரும் அரசியல் அம்பு என்று கருதப்பட்டது. இதனுடன் மோடியின் 'டபுள் என்ஜின் அரசு' பேச்சும் வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி இருந்தால் வளர்ச்சி இரட்டிப்பாகும் என்றார் மோடி. இந்த பேச்சின் தாக்கமே 'மோ-நி' மேஜிக்காக மாறி என்டிஏ கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. இந்நிலையில், இந்திய அரசியலில் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் தடுமாறி வரும் காங்கிரஸ், பீகார் தேர்தலில் முற்றிலும் காணாமல் போனது என்றே கூறலாம்.
ஆர்ஜேடி சரிவு
கூட்டணியாக இருந்த ஆர்ஜேடிக்கும் இந்த தோல்வி பெரிய அதிர்ச்சியாக உள்ளது. ஆனால் ஆர்ஜேடியைப் பலவீனப்படுத்தியதில் முக்கிய பங்கு காங்கிரஸுக்கே உண்டு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். SIR திருத்தத்திற்கு எதிராக ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் இணைந்து சில பெரிய பொதுக்கூட்டங்களை நடத்தியிருந்தாலும், அது வாக்காளர்களிடம் பேரதிர்வை ஏற்படுத்தவில்லை. அதன்பின்னர் காங்கிரஸின் பிரச்சாரம் மிகவும் பலவீனமானதாக இருந்தது. கூட்டணியில் அதிக சீட்டுகளைப் பெற்ற காங்கிரஸ், அவற்றை வெற்றிக் கணக்காக மாற்றும் திட்டத்தோடு செயல்படவில்லை
காங்கிரஸ் தோல்வி
2014 முதல் பாஜக வலியுறுத்தி வரும் 'காங்கிரஸ் முக்த் பாரத்' என்ற முழக்கத்தை, அதாவது காங்கிரஸ் இல்லா இந்தியா என்பதை பீகார் வாக்காளர்களே செயல்படுத்திவிட்டனர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. காங்கிரஸ் வெறும் 5 இடங்களுக்குள் மட்டுமே வெல்லும் நிலையில் இருப்பதால் பீகாரில் அதன் எதிர்காலம் குறித்து இயல்பாகவே பல கேள்விகள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications