பீகார் நிதியமைச்சரின் உறவினர் வீடுகளில் ரெய்டு.. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இணைந்து அதிரடி
பாட்னா: பாஜகவை வீழ்த்த, ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் ஒன்று கூடுகின்றன. இந்நிலையில், பீகார் நிதியமைச்சரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் திடீர் ரெய்டு நடத்தியுள்ளனர். கடந்த 10 மாதங்களில் நிதீஷ் குமாருக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தப்படும் 4வது பெரிய ரெய்டு இதுவாகும்.
மத்தியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது முறையும் பாஜக வெற்றிப் பெற வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மூன்றாவது முறையும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை அவர் மீண்டும் பிரதமராக வெற்றி பெற்றுவிட்டால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமரான ஒரே நபர் இவர்தான் என்கிற பெருமையையும் பெறுவார்.

அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதற்காக கட்சி கடுமையாக உழைத்து வருகிறது. மறுபுறம், இமாச்சல் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும், வட மாநிலங்களில் அதன் செல்வாக்கு கடுமையாக சரிந்து வருகிறது. இதனை ஈடு செய்ய இந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று கட்சி திட்டமிட்டுள்ளது.
இதனை சாத்தியமாக்கும் வகையில் இன்று பாட்னாவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில், ராகுல் காந்தி, சரத்பவார், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒருங்கிணைத்துள்ளார். இந்நிலையில் நிதீஷ் குமாருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அமைச்சரான பீகாரின் நிதியமைச்சர் விஜய் குமார் சவுத்ரியின் உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை திடீரென ரெய்டு நடத்தியிருக்கிறது.
அமைச்சர் விஜய் குமாருக்கு மிகவும் நெருக்கமான உறவினரான அஜய் குமார் என்பவருக்கு சொந்தமான இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்றுள்ளது. அஜய் குமார் ஓரு தொழிலதிபராவார். இந்த ரெய்டு குறித்து பேசிய அமைச்சர் விஜய் குமார், "அஜய் குமார் எனக்கு நெருங்கிய உறவினராவார். மட்டுமல்லாது மாநில அரசுக்கு அதிக வரியை செலுத்தக்கூடிய நபருமாவார். இந்த திடீர் ரெய்டுக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
கடந்த 10 மாதங்களில் நிதீஷ் குமாருக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தப்படும் 4வது பெரிய ரெய்டு இதுவாகும். இதற்கு முன்னர் மாநிலத்தின் தொழில்துறை அமைச்சரான சமீர் குமார், கட்சியை சேர்ந்த எம்எல்சி என 3 முக்கிய நபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இதுபோன்று ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications