பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேர்.. லிஸ்ட்டை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
பாட்னா: பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அங்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், அந்த பெயர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தம் என்பது, ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் லிஸ்ட்டை கணக்கில் கொள்ளாமல் புதிய லிஸ்ட்டை உருவாக்குவதுதான். தேர்தல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை உறுதி செய்து பட்டியலை தயார் செய்வார்கள். இப்படி செய்ய கொஞ்சம் டைம் எடுக்கும். ஆனால் தேர்தலை நெருக்கத்தில் வைத்துக்கொண்டு ஏன் இதை செய்ய வேண்டும்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இருப்பினும் தேர்தல் ஆணையம் இதை செய்து முடித்தது.

முடிவில் கடந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் இடையில் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருக்கிறார்கள் என ஆணையம் அறிவித்தது. அதாவது, புலம் பெயர்ந்தவர்கள், போலி முகவரி, வெவ்வேறு முகவரியில் ஒரே நபர் வசிப்பது, உயிரிழந்தவர்கள் என மொத்தம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டார்கள் என்று ஆணையம் கூறியிருந்தது. ஆனால், இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதை ஆணையம் ஏற்கவில்லை. அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது.
இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எதிர்க்கட்சிகள் கொண்டு சென்றன. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 65 லட்சம் பேரின் பெயர் பட்டியலை வெளியிட உத்தரவிட்டது. இதனையடுத்து பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.
"நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 56 மணி நேரத்தில் பட்டியலை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். எதிர்க்கட்சியினர் கணினியால் வாசிக்கக்கூடிய டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கேட்டிருக்கின்றன. ஆனால் அப்படி வெளியிட முடியாது. ஏனெனில் அதில் திருத்தம் செய்ய முடியும். எனவே அதை எங்களால் வெளியிட முடியாது" என ஆணையர் கூறியிருக்கிறார்.
குற்றச்சாட்டுகள் என்ன?
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இதன் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். இக்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. இப்படி இருக்கையில்தான் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திருத்த நடவடிக்கையின் போது வீடு வீடாக வரும் அதிகாரிகள், ஆதார் அட்டையை ஆதாரமாக ஏற்க மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால், பாட்னா உள்ளிட்ட நகர் பகுதியில் ஆதாரை ஆவணமாக ஏற்றிருக்கிறார்கள் என்றும் அதேபோல இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியில் ஆதார் மட்டுமல்ல ரேஷன் அட்டையை கூட ஆதாரமாக ஏற்க மறுக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. பாஜகவுக்கு எதிரான வாக்காளர்களை கழற்றிவிடும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனையடுத்து நீதிமன்றம் ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க அறிவுறுத்தியது. இது தனி கதை.
இப்படியாக வாக்காளர் பட்டியலை தயாரித்த தேர்தல் ஆணையம், அதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக அறிவித்தது. யார் யார் விடுபட்டார் என்பது எப்படி தெரியும்? எனவே விடுபட்டவர்களின் பெயரை வெளியிட வேண்டும் என கோரியிருந்தன. தேர்தல் ஆணையம் மறுக்கவே, தற்போது நீதிமன்ற உத்தரவையடுத்து இந்த பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications