தேர்வு அறையில் பிரசவ வலி.. டெலிவரி முடிந்து 3 மணி நேரத்தில் மீண்டும் வந்து தேர்வு எழுதிய பெண்! சபாஷ்
குழந்தை பிறந்து சில மணி நேரத்தில் தேர்வு எழுதிய பெண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
பாட்னா: பீகார் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வை வந்து எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி ரொம்பவே முக்கியமானது. நம்மிடம் இருக்கும் அனைத்து செல்வங்களையும் நாம் இழந்தாலும் கூட கல்வி செல்வம் எப்போதும் நம்மைக் காக்கும். திருக்குறளிலும் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி அதிகாரமே உள்ளது.
அந்தளவுக்குக் கல்வி செல்வம் என்பது நம் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். இதன் காரணமாகவே அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கல்வி
குறிப்பாகப் பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு சமூகம் எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை அங்குள்ள பெண்கள் எந்தளவுக்குப் படித்துள்ளனர் என்பதை வைத்தே உணர்ந்து கொள்ளலாம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், நமது நாட்டில் இன்னுமே ஆண்களுக்கு நிகராக பெண்களைப் படிக்கவைப்பது இல்லை. வடமாநிலங்களில் இந்த நிலை இன்னுமே மோசம். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே கூட திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

பீகார்
அசாமில் குழந்தை திருமணம் விவகாரத்தில் சில வாரங்களுக்கு முன்பு தான் பல நூறு பேரை அம்மாநில போலீசார் கைது செய்திருந்தனர். இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அங்கும் பல பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல பிரச்சினைகளைத் தாண்டி படித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் அப்படித்தான் நிறைமாத கர்ப்பிணியாகவே ஒருவர் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுத வந்துள்ளார். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது, பிரசவ வலியும் ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்
பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருக்மிணி.. 22 வயதான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்துவிட்டது. அப்போது இவர் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பள்ளிப் படிப்பை முடித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் கர்ப்பமாக இருந்த போதிலும், இந்த வாரம் நடக்கும் 10ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதியுள்ளார். செவ்வாய்க்கிழமை அவர் கணித தேர்வை எழுதியுள்ளார்.

பிரசவ வலி
மறுநாள் அவருக்கு சயின்ஸ் தேர்வு இருந்துள்ளது. இருப்பினும், செவ்வாய் இரவே அவருக்குப் பிரசவ வலி ஏற்படத் தொடங்கியுள்ளது. இருப்பினும், தேர்வை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார். இதனால் பிரசவ வலியுடன் தேர்வு அறைக்குச் சென்றுள்ளார். இருப்பினும், தேர்வு ஆரம்பிக்கும் முன்பே, அந்த பெண்ணுக்குப் பிரசவ வலி தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர் அதிகாரிகளிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

சுகப்பிரசவம்
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குச் சுகப் பிரசவத்தில் அவருக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. அங்கிருந்த மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கச் சொல்லியுள்ளனர். இருப்பினும், அன்றைய தினம் சயின்ஸ் தேர்வு இருந்ததால் ருக்மணி தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு சுகாதார மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். நிலைமை உணர்ந்த கல்வித் துறை அதிகாரிகள் ருக்மணிக்கு மட்டும் தேர்வு எழுதச் சிறப்பு அனுமதி கொடுத்துள்ளனர்.

நெகிழ்ச்சி
இதையடுத்து குழந்தை பிறந்து 3 மணி நேரத்தில் அவர் நினைத்ததை போல சயின்ஸ் தேர்வை எழுதியுள்ளார்.. தேர்வு மையத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தவுடன் லேபர் ரூம் தயார் நிலையில் வைக்கப்பட்டதாகவும் பெண்ணுக்கு நல்லபடியாக சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும் டாக்டர் போலநாத் தெரிவித்தார். இந்த இளம் தாயின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். எந்த நேரத்திலும் கல்வி எந்தளவுக்கு முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த ருக்மணி ஒரு சிறந்த உதாரணம் என்று பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications