தொடரும் அதிரடி.. வசமாய் சிக்கிய பீகார் யூடியூபர்.. தமிழர்கள் பற்றிய வதந்தி..தட்டித்தூக்கிய போலீஸ்!
தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்து வரும் பீகார் மாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்கியதாக போலியாக வீடியோக்கள் பரப்பப்பட்டன.
பாட்னா: தமிழர்கள் பற்றியு வதந்தி பரப்பும் வகையில் தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக வதந்தி பரப்பியோர் மீது தமிழ்நாடு மற்றும் பீகார் போலீசார் தனித்தனியாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் போலியாக வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கட்டடம், பாலம் கட்டுதல், தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகளில் வடமாநில தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத்தவர்கள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தமிழ் பேச சொல்லி கட்டாயப்படுத்தி அடித்து உதைத்ததாகவும் போலியாக வீடியோக்களை சில விஷமிகள் இணையதளங்களில் பரப்பின.

முதல்வர் எச்சரிக்கை
குறிப்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்திகளை பரப்பினர். இதற்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு, போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்கள் எச்சரித்து இருந்தனர்.

பீகார் குழு ஆய்வு
மேலும் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து அந்த மாநில அதிகாரிகள் குழு தமிழ்நாட்டுக்கு வந்தனர். அவர்கள் திருப்பூர், கோவை உள்பட பல இடங்களில் பணி செய்யும் பீகார் மாநில தொழிலாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் நலமாக உள்ளதாகவும், எந்த அச்சுறுத்தலும், தாக்குதலும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

அதிரடி காட்டும் போலீஸ்
மேலும் வதந்தி பரப்பியோர் மீது வழக்குப்பதிவு செய்து தமிழ்நாடு மற்றும் பீகார் மாநில போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பிரசாந்த்குமார் உம்ராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளார். இந்த மனு விசாரணையில் உள்ளது.

பிரபல யூடியூபர் கைது
இதற்கிடையே தான் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்பிய பிரபல யூடியூபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதன்படி இன்று காலை பீகாரை சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை போலீசார் கைது செய்தனர். இவர் தனது யூடியூப் சேனலில் தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்படுவதாக கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இவரை போலீசார் தேடிவந்த நிலையில் இன்று சிக்கினார்.

கைது முதல் முறையல்ல
இவர் போலீசாரால் கைது செய்யப்படுவது முதல் முறையல்ல.இதற்கு முன்பு மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பெட்டியா அருகே ஜகதீஷ்பூர் போலீசாரால் பொருளாதாரம் சார்ந்த குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டு இருந்த நிலையில தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது பல வழக்குகள் பீகாரில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications