"சாதி வாரியான கணக்கெடுப்பிற்கு முழு சப்போர்ட்.." திடீரென யூ டர்ன் போடும் பாஜக! என்ன காரணம் தெரியுமா
பாட்னா: சாதி வாரியான கணக்கெடுப்பை நிதிஷ் கட்சி பீகாரில் நடத்தி இருந்தது. இருப்பினும், அதை இத்தனை காலம் பாஜக எதிர்த்தே வந்தது. ஆனால், லோக்சபா தேர்தலுக்குப் பிறகு பாஜக நிலைப்பாடு பல விவகாரங்களில் மெல்ல மாற தொடங்கியுள்ளது. அதன்படி சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்திலும் தாங்கள் எதிராக இல்லை என்று கூறியுள்ளது பீகார் பாஜக.. இது தேசிய அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பீகாரில் நிதிஷ்குமார் காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணியில் இருந்த போது சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தி இருந்தார். இருப்பினும், அதற்கு பாஜக அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், இப்போது லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி தொடர ஜேடியு ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாதி வாரியான கணக்கெடுப்பு விவகாரத்தில் பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
நிலைப்பாட்டில் மாற்றம்: பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி இந்த விவகாரத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் தான் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாகத் தெரிவித்த சாம்ராட் சௌத்ரி, பீகாரில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்துவதை பாஜக ஆதரித்தே வந்துள்ளதாகக் கூறினார். மேலும், ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி உரிய முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக குவாலியரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பீகார் மாநிலத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்துவதை பாஜக ஆதரித்தே வருகிறது. இதற்கு நாங்கள் எதிராக இல்லை. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துவிட்டார். ஜாதி வாரியான கணக்கெடுப்பிற்கு பாஜக எதிரானது இல்லை.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி சரியான முடிவெடுப்பார்" என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தான் எதிரி: நீட் வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆனது.. இட ஒதுக்கீடு குறித்து காங்கிரஸின் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சவுத்ரி, "இப்படி எல்லாம் பேசி வரும் ராகுலுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ராகுலின் தந்தை (மறைந்த பிரதமர்) ராஜீவ் காந்தி இட ஒதுக்கீட்டை வலியுறுத்திய மண்டல் கமிஷனை அமல்படுத்துவதை எதிர்த்தார். 1952ல் பி.ஆர்.அம்பேத்கர் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியபோது, ஜவஹர்லால் நேரு அதை எதிர்த்தார்.
காங்கிரஸ் கட்சியும் சரி.. இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் சரி இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவே இருக்கிறது.. அதேநேரம் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை எப்போதும் ஆதரித்தே வந்துள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோரும் மண்டல் கமிஷனை ஆதரித்தனர்" என்றார்.
பிரதமர் மோடி: சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு இருந்தாலும் வறுமை என்பது கவலைக்குரிய ஒன்றாகவே இருப்பதை ஒப்புக்கொண்ட சவுத்ரி, இந்த விவகாரத்தில் தீர்வு காணப் பிரதமர் மோடி தொடர்ந்து உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் இந்தாண்டு தொடக்கம் வரை நிதிஷ்- காங்கிரஸ்- ஆர்ஜேடி இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த பாஜகவின் இந்த சௌத்ரி, நிதிஷ் குமாரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கம் செய்த பின்னரே தனது தலைப்பாகையை அகற்றுவேன் எனக் கூறி தலைப்பாகையைக் கட்டினார்.
தலைப்பாகை: ஆனால், இப்போது நிதிஷ் உடன் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், சவுத்ரி துணை முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார். இதையடுத்து அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தனது தலைப்பாகையை ஜூலை 2ஆம் தேதி கழற்ற உள்ளதாகப் பீகார் துணை முதல்வர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications