இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்.. பீகாரை காட்டி ராகுல் காந்தி ட்வீட்!
பாட்னா: பீகார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு விவரங்களை சுட்டிக்காட்டி இந்தியாவிலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது. அண்மைகாலங்களில் நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய முதல் மாநிலம் பீகார். ஆனால் இதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன. இந்நிலையில் தற்போது பீகார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் 63.14% : பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி. இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13%; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%; ஒட்டுமொத்தமாக பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14%; பொதுப் பிரிவினர் 15.52%; தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%.; பழங்குடி இன மக்கள் 1.69% என தெரிவிக்கப்பட்டது.
மத ரீதியான கணக்கெடுப்பு படி, இந்துக்கள் 81.99%; முஸ்லிம்கள் 17.7% ; கிறிஸ்தவர்கள் 0.05% ; சீக்கியர்கள் 0.01%; பவுத்தர்கள்- 0.08% ; இதர மதத்தினர் 0.12% என்ற விவரம் தெரியவந்தது. அதேபோல், ஜாதி அடிப்படையில், யாதவர்கள் (துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஜாதி) : 14%; குஷாவா 4.27% ; பிராமணர்கள் 3.65% ; முஷாகர்- 3% குர்மி (நிதிஷ்குமார் ஜாதி) 2.87% ; பூமிகார்- 2.86% ஆகிய விவரங்களை இன்று பீகார் அரசு வெளியிட்டது.
இந்த நிலையில், இந்த கணக்கெடுப்பு விவரங்களை சுட்டிக்காட்டி இந்தியாவிலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதவது:- பீகாரில் ஓபிசி, எஸ்.சி,எஸ்.டி பிரிவினர் 84 % இருப்பது சாதி வாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் 90 செயலாளர்களில் வெறும் 3 பேர் தான் ஒபிசி வகுப்பை சேர்ந்தவர்கள். இந்தியாவின் பட்ஜெட்டில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே இவர்கள் கையாள்கிறார்கள். எனவே, இந்தியாவில் ஜாதிவாரி புள்ளி விவரங்களை அறிந்து கொள்வது அவசியம். மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் உறுதியான நிலைப்பாடு" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications