108 ஆட்டு ரத்தத்தில் குளித்த ஜகன்நாத் மிஸ்ரா! பாபர் மசூதிக்காக கண்ணீர்! பீகாரின் கடைசி காங். சிஎம்
பாட்னா: 2025ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் (Bihar Election Date) நவம்பர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 5 முதல் நவம்பர் 15 வரை பல கட்டங்களாக இந்தத் தேர்தல் நடக்கும் வாய்ப்பு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ திட்டத்தைக் அக்டோபர் 6க்கு பிறகு அறிவிக்கும், மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30, 2025 அன்று வெளியிடப்படும்.
பீகார், தமிழக மக்களில் பெரும்பாலானோருக்கு மர்ம பிரதேசம். கல்வியறிவு குறைவு, சட்டம்-ஒழுங்கு சரியிருக்காது போன்ற பொது எண்ணங்கள்தான் உண்டு. ஆனால் பீகார் பல வகைகளில் தனித்துவமானது. படிப்பறிவு இல்லை என்று பலரும் நினைக்கும் பீகார்தான், ஐஏஎஸ் அதிகாரிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்ற செல்ல பெயரை பெற்ற மாநிலமாகவும் விளங்குகிறது. இப்போதும் கூட உ.பி.க்கு பிறகு அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் பீகாரிலிருந்து வருகிறார்கள். மூன்றாவது இடம் ராஜஸ்தானுக்கு. நான்காவதுதான் நகர்ப்புறமான டெல்லியே வருகிறது. 6வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம். பீகாரின் அரசியல் வானில் காங்கிரஸின் கடைசி பிரகாசமான நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் ஜகந்நாத் மிஸ்ரா. ஒருகாலத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர், அரசியலில் புகுந்த பிறகு ஆன்மீகம், சடங்குகள் மற்றும் ஜோதிடத்தில் மூழ்கிப்போனார். அவரது அரசியல் வாழ்க்கை சறுக்கல்களும், எழுச்சிகளும் நிறைந்த ஓர் அத்தியாயம்.
அதிகாரத்திற்காக 108 ஆடுகளின் ரத்தக் குளியல்!
இந்தச் சம்பவம் 1982 செப்டம்பரில் நடந்தது. பீகாரின் முக்கிய செய்தித்தாள்களான இந்தியன் நேஷன் மற்றும் ஆர்யவர்த்தா ஆகியவை பீகார்-உத்தரப் பிரதேச எல்லையில் முதலமைச்சர் ஜகந்நாத் மிஸ்ரா ஒரு விசேஷ பூஜை செய்ததாக செய்தி வெளியிட்டன. புரோகிதர்கள் ஆலோசனையின் பேரில், தனது பதவி நீடிக்க வேண்டி, அவர் 108 ஆடுகளைப் பலியிட்டு அவற்றின் ரத்தத்தில் குளித்தார் என்று செய்திகள் வெளியிட்டன.
இந்தச் செய்தி குறித்து பத்திரிகையாளர்கள் மிஸ்ராவிடம் கேட்டபோது, அவர் கோபத்துடன், "அது ஒரு வதந்தி, இதுவெல்லாம் பச்சைப் பொய்!" என்று சத்தம் போட்டு சொன்னார்.
இதையடுத்து, கவிஞர் சர்வேஸ்வர் தயாள் தனது தின்மன் பத்திரிகையில் ஒரு நையாண்டி கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு: 'அகில இந்திய ஆட்டுக் கழகம்'. அதில் அவர், "முதலமைச்சர் ஜகந்நாத் மிஸ்ரா, தனது துரதிர்ஷ்டங்களைத் துடைக்க 108 ஆடுகளின் ரத்தத்தில் குளித்தார் என்ற செய்தி வெளியானதில் இருந்து, நாடு முழுவதும் உள்ள ஆடுகளிடையே பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது" என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவல் பரவியதில் ஆச்சரியம் தேவையில்லை. ஏனெனில், 10-ல் 6 விரல்களில் மோதிரங்கள், வீட்டையும் அலுவலகத்தையும் இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் பூசி, நாள் முழுவதும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டவர் தான் இந்த ஜகந்நாத் மிஸ்ரா. காங்கிரசை சாஃப்ட்டான இந்துத்துவா கட்சி என்று அழைப்பதற்கு இதுபோன்ற பல தலைவர்கள்தான் காரணமாக இருந்தனர்.
அண்ணன் கொலைக்குப் பின் ஆட்சிப் பொறுப்பு
ஜகந்நாத் மிஸ்ரா, தனது அண்ணனும் மத்திய ரயில்வே அமைச்சருமான லலித் நாராயண் மிஸ்ராவிடமிருந்து தான் அரசியலைக் கற்றுக்கொண்டார். 1975 ஜனவரி 2 ஆம் தேதி சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் படுகாயமடைந்த லலித் நாராயண் மிஸ்ரா, மறுநாள் உயிரிழந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு மத்திய அமைச்சர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இந்தச் சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. லலித் பாபுவின் மரணம் ஒரு அரசியல் சதி என்றும் பேசப்பட்டது.
அண்ணன் இறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, அனுதாப அலையைப் பயன்படுத்தவும், ஸ்திரமற்ற காங்கிரஸைக் காப்பாற்றவும், இந்திரா காந்தி ஒரு அரசியல் நகர்வை மேற்கொண்டார். 1975 ஏப்ரல் 11 அன்று, வெறும் 38 வயதே ஆன ஜகந்நாத் மிஸ்ரா பீகாரின் இளம் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இந்திராவுடனான மோதல் மற்றும் ராஜினாமா
தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் (1980), உருது மொழியை பீகாரின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தார். இதனால் முஸ்லிம்களின் பலமான தலைவராக உருவெடுத்தார். ஆனால், சொந்த மிதிலாப் பகுதியிலேயே 'மௌலானா மிஸ்ரா' என்று விமர்சிக்கப்பட்டார்.
1982 ஜூலையில், பத்திரிகையாளர்கள் மாநில அரசைக் விமர்சித்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கும் பீகார் பத்திரிகை மசோதாவை அவர் கொண்டுவந்தார். நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பவே, இந்த மசோதாவை அவர் திரும்பப் பெற்றார். இந்திரா காந்தியை மகிழ்விக்கவே மசோதாவைக் கொண்டுவந்ததாகப் பின்னர் ஒப்புக்கொண்டார்.
1983-ல் மத்திய அரசின் புதிய தாதுப் பொருள்கள் கொள்கையை எதிர்த்து சட்டப்பேரவையில் மிஸ்ரா இரண்டு மணி நேரம் உரையாற்றினார். இதனால் கோபமடைந்த இந்திரா காந்தி, அவரை பதவி விலகும்படி கட்டாயப்படுத்தினார். 1984 ஆகஸ்ட் 14 அன்று அவர் தனது முதலமைச்சர் பதவியைத் துறக்க நேரிட்டது.
பாபர் மசூதி விவகாரத்தில் கண்ணீர்
1989-ல் பாகல்பூர் கலவரங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களைச் சமாதானப்படுத்த ராஜீவ் காந்தி மீண்டும் ஜகந்நாத் மிஸ்ராவை மூன்றாவது முறையாக முதலமைச்சராக்கினார். ஆனால், காங்கிரஸுக்குப் பெரும் தோல்வி கிடைக்க, லாலு பிரசாத் யாதவ் முதல்வரானார்.
1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, மிஸ்ரா தனது சுயசரிதையில், "நான் அன்றைய தினம் கண்ணீர் விட்டு அழுதேன். உடனே மசூதியைக் கட்டும்படி பிரதமர் நரசிம்ம ராவிடம் நான் கேட்டுக்கொண்டேன்" என்று எழுதியுள்ளார். மசூதியைக் கட்டினால் எதிர்காலத்தில் நாட்டின் ஒற்றுமைக்கு ஒரு நேர்மறையான செய்தி செல்லும் என்று அவர் வாதிட்டார்.
தீவன ஊழல் மற்றும் இறுதிக்காலம்
வாழ்நாள் முழுவதும் காங்கிரஸில் இருந்த மிஸ்ரா, சீதாராம் கேஸ்ரியுடனான நீண்டகால மோதலால் 1997-ல் கட்சியை விட்டு வெளியேறி, 'பீகார் ஜன காங்கிரஸ்' என்ற சொந்தக் கட்சியைத் தொடங்கினார்.
இதற்கிடையில், அவர் மாட்டுத் தீவன ஊழலில் சிக்கினார். இந்த ஊழலில் லாலு பிரசாத் யாதவுடன் சேர்ந்து மிஸ்ராவும் குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்றார். 2013-ல் CBI நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
கடைசிக் காலத்தில் ஜகந்நாத் மிஸ்ரா பா.ஜ.க.வில் இணைந்தார். புற்றுநோயால் போராடிய அவர், 2019 ஆகஸ்ட் 19 அன்று காலமானார். தனது அரசியல் வாரிசான தனது மகன் நிதீஷ் மிஸ்ராவை பா.ஜ.க.வுக்குள் கொண்டுவந்து, தனது அத்தியாயத்தை முடித்தார். ஆம்.. இந்த காங்கிரஸ் நதியும், கடைசியில், பாஜக என்ற கடலில் கலந்தது.












Click it and Unblock the Notifications