பெட்ரோல் விலையேற்றம்.. மிக பெரிய சதி, '420' கேஸ் போடுங்க.. அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது வழக்கு
பாட்னா: நாட்டில் பெட்ரோல் விலை உயர்வில் சதி நடப்பதாகவும் இதில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக விசாரணை செய்ய வேண்டும் எனப் பீகாரில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், நாட்டில் பெட்ரோல் , டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே நாட்டில் பெட்ரோல் விலை உயர்வதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், மத்திய அரசின் வரிகளே பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

சதமடித்த பெட்ரோல்
இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு தொடங்கி ஜம்மு காஷ்மீர் வரை பல இடங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.80க்கும், டீசல் ரூ 93.72க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமன்னா ஹாஷ்மி என்பவர் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக அங்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள போதிலும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

சதி
பெட்ரோல், டீசல் விலை உயர்வில் சதி நடப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், இது மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் தனது மனுவில் கூறியுள்ளார். இதனால் ஐபிசி 420 (மோசடி), 295 மற்றும் 295ஏ என பல்வேறு பிரிவுகளில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த தமன்னா ஹாஷ்மி
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான தமன்னா ஹாஷ்மி ஏற்கனவே பல பிரச்சினைகள் தொடர்பாக முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தவர். இதற்கு முன்னதாக பதஞ்சலி விளம்பரங்கள் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறி பாபா ராம்தேவ் மீது தமன்னா ஹாஷ்மி வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications