இது "பீகார் ஃபைல்ஸ்!" இந்து கோவிலுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தானம் செய்த முஸ்லீம் குடும்பம்
பாட்னா: உலகின் மிகப்பெரிய கோயிலாக விராட் ராமாயண் மந்தீர் பீகாரில் கட்டப்பட உள்ளது. இந்த கோயிலுக்கு முஸ்லிம் குடும்பத்தின் சார்பில் ரூ.2.5 கோடி மதிப்பிலான நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் மொழி, இனம், மதத்தின் அடிப்படையில் மக்களை சில சக்திகள் பிரிக்க முயற்சிப்பதாகவும் அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இருப்பினும் நாட்டில் பொதுமக்களிடம் இன்னும் சகோதரத்துவம், மனிதநேயம் என்பது மறைந்து போகவில்லை. சாதி, மதம், இனம் பாகுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வருகின்றனர். இது இந்தியாவின் இறையாண்மையை காக்கும் வகையில் உள்ளது.

மிகப்பெரிய கோயிலாக கட்ட...
இந்நிலையில் தான் பீகாரில் விராட் ராமாயண் மந்தீர்(Virat Ramayan Mandir) எனும் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. உலகில் மிகப்பெரிய கோயிலாக இதை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டம் கைத்வாலியா பகுதியில் இந்த கோயில் அமைய உள்ளது. அதன்படி கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் புத்த ஆலயத்தைவிட இது பெரிதாக அமைகிறது.

ரூ.2.5 கோடி நிலம் நன்கொடை
இந்நிலையில் இந்த கோயில் கட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான நிலத்தை முஸ்லிம் குடும்பம் ஒன்று தானமாக வழங்கியுள்ளது. அதாவது தொழிலதிபர் இஸ்தியாக் அகமது கான் என்பவர் தனது குடும்பத்தினரின் பெயரில் உள்ள ரூ.2.5 கோடி மதிப்பிலான நிலத்தை கோயில் கட்ட தானமாக வழங்கியுள்ளார். கொடுத்துள்ளனர். இதுதொடர்பான பத்திரப்பதிவு கேசாரியாவில் நடந்தது.

எனது பொறுப்பு
இதுபற்றி இஸ்தியாக் அகமது கான் கூறுகையில், ‛‛இந்த கிராமத்தில் பெரும்பாலான நிலங்கள் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமானவை. இந்த கோயில் கட்டுவதற்கு பங்களிப்பு செய்வது என்பது எனது பொறுப்பு. இது தான் எங்கள் குடும்பத்தின் பாரம்பரியமாக உள்ளது. நிலம் தானமாக வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார். கிழக்கு சாம்பரான் பகுதியில் வசிக்கும் இஸ்தியாக் அகமது கான் கவுகாத்தியில் தொழில் செய்து வருகிறார்.

சமூக நல்லிணக்கத்துக்கு உதாரணம்
இதுகுறித்து பாட்னாவை தலைமையிடமாக கொண்டு செய்படும் மகாவீர் மந்தீர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சாரியா கிஷோர் குணால் கூறுகையில், ‛‛விராட் ராமாயண் மந்தீர் கட்ட இஸ்தியாக் அகமது கான் குடும்பத்தினர் தங்களது நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். கோயில் கட்ட உதவி செய்வதாக இஸ்தியாக் அகமது கான் மற்றும்அவரது குடும்பத்தினர் கூறினர். தற்போது அதை நிறைவேற்றி உள்ளனர். சமூக நல்லிணக்கத்துக்கு இஸ்தியாக் அகமது கான் சிறந்த உதாரணமாக உள்ளார். முஸ்லிம் மக்களின் உதவி இல்லாவிட்டால் இந்த கனவு திட்டம் உண்மையாக வராது. இஸ்தியாக் அகமது கானை தொடர்ந்து பலர் கோயிலுக்கு தானமாக நிலங்கள் வழங்கியுள்ளனர். தற்போது வரை 100 ஏக்கர் நிலம் அறக்கட்டளையிடம் உள்ளது.

ரூ.500 கோடி மதிப்பீடு
இந்த கோயில் ரூ.500 கோடி மதிப்பில் உருவாக்கப்பட உள்ளது. இந்த கோயில் 270 அடி உயரம், 1080 அடி நீளம், 540 அடி அகலத்தில் அமைய உள்ளது. டெல்லியில் புது நாடாளுமன்றம் கட்டத்தை வடிவமைத்த குழுவிடம் ஆலோசனைகள் கேட்கப்பட உள்ளது. விராட் ராமாயண் கோயில் வளாகத்தின் இரண்டு பக்கங்களிலும் சாலை உள்ளது. அயோத்தியில் இருந்து ஜனக்பூர் வரையிலான ராம் ஜானகி சாலை இப்பகுதி வழியாக செல்லும்'' என்றார்.












Click it and Unblock the Notifications