‛‛கோவிலில் சத்தியம் செய்த மாணவர்கள்’’.. காணாமல்போன ரூ.35-ஆல் களேபரமான பள்ளி! ஆசிரியை தூக்கியடிப்பு
பாட்னா: பீகாரில் ரூ.35 காணாமல் போனதாக கூறி மாணவர்களை கோவிலுக்கு அழைத்து சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியை மீது அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.
பள்ளிகளில் படிக்கும் சிறுவயது மாணவ-மாணவிகள் அடிக்கடி தங்களின் பொருட்களை தவறவிடுவது உண்டு. ஆனால் இங்கே ஒரு ஆசிரியை ரூ.35 காணாமல் போனதாக கூறி மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி சிக்கலில் சிக்கி உள்ளார்.

அதாவது பீகாரின் பாங்கா மாவட்டத்தில் தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மொத்தம் 122 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நீது குமாரி உள்பட 2 பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த 21ம் தேதி ஒரு ஆசிரியர் விடுப்பில் சென்றார். இதனால் நீது குமாரி மட்டுமே பள்ளிக்கு சென்றார். வழக்கம்போல் பள்ளி தொடங்கியது. வகுப்பறையில் இருந்த ஆசிரியை நீது குமாரி, ஒரு மாணவரை அனுப்பி தனது ஹேண்ட்பேக்கில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவர் தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து கொடுத்தார். அதன்பிறகு சிறிது நேரத்தில் நீது குமாரி தனத ஹேண்ட் பேக்கில் இருந்த ரூ.35 காணவில்லை என கூறினார். மேலும் தண்ணீர் பாட்டில் எடுத்த மாணவர் திருடி இருக்கலாம் என அவர் சந்தேகித்தார். மாணவரிடம் கேட்டதற்கு அவர் பணத்தை எடுக்கவில்லை என கூறினார்.
இருப்பினும் ஆசிரியை நீது குமாரி விடவில்லை. அனைத்து மாணவர்களையும் அழைத்து ரூ.35 காணாமல் போனதாக கூறி விசாரித்தார். அப்போது அவர்கள் அனைவரும் பணத்தை எடுக்கவில்லை என்று கூறினர். இருப்பினும் நீது குமாரி நம்பவில்லை. இதையடுத்து அனைத்து மாணவர்களையும் பள்ளி அருகே உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று ‛பணத்தை எடுக்கவில்லை' எனக்கூறி சாமி மீது சத்தியம் செய்ய வைத்தார்.
இதுபற்றி மறுநாள் கிராம மக்கள் அறிந்தனர். அவர்கள் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். மேலும் போராட்டத்தில் ஈடுப்டடனர். இதையடுத்து நீது குமாரிடம் வட்டார கல்வி அதிகாரி குமார் பங்கஜ் விசாரித்தார். அப்போது, ‛‛ நான் இந்த பள்ளியில் 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். காணாமல் போன பணம் பற்றி தான் விசாரித்தேன். நான் எப்படி என் மாணவர்கள் மீதே சந்தேகப்படுவேன். ஆனால் மாணவர்கள் தான் தானாகவே கோவிலுக்கு சென்று சத்தியம் செய்தனர்'' என கூறினார்.
ஆனால் கிராம மக்கள் அவரை நம்பவில்லை. நீது குமாரிக்கு தண்டனை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து நீது குமாரி அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications