சூடுபிடித்த பீகார் தேர்தல் களம்.. தொகுதி பங்கீட்டில் குழப்பம்! இந்தியா கூட்டணியில் சலசலப்பு
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி தீவிரமாக களமிறங்கியிருக்கிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் இந்த கூட்டணியில் புதியதாக இரண்டு கட்சிகள் இணைய இருப்பதால், தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக இருக்கிறார். பீகார் முதல்வராக அவர் நீடிப்பது இது 9வது முறையாகும். இக்கட்சி தேசிய அளவில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முழு வேகத்தில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகள் தயாராகி வருகின்றன. பீகார் மாநிலத்திற்குள் காங்கிரஸ் கூட்டணி 'மகாபந்தன்' கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ராஷ்ட்ரிய ஜனதா தளம்தான். இக்கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ், பீகாரின் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். எனவே அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது.
இந்த கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM), விகாஷீல் இன்சான் கட்சி ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. இத தவிர புதியதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) மற்றும் பஷுபதி பாரஸ் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி ஆகியவையும் இணைய இருக்கின்றன. இதனால் தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் இருக்கின்றன. இதில் காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளுக்குக் குறைவாகப் போட்டியிட முடியாது என கூறி வருகிறது. மறுபுறம், விகாஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சஹானி 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவியை கோரியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) (CPI-ML) தனது கடந்தகால செயல்திறனைக் குறிப்பிட்டு குறைந்தபட்சம் 40 தொகுதிகளைக் கோரி வருகிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் 150க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிட விரும்பவில்லை. 2020 சட்டமன்றத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75 இடங்களை வென்றது. காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களை மட்டுமே வென்றது. CPI-ML 19 இடங்களில் போட்டியிட்டு 12 இடங்களை வென்றது. CPM 4 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களிலும், CPI 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இப்படி இருக்கையில் புதியதாக இணைந்திருக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது? அதற்காக எந்த கட்சியிடமிருந்து தொகுதிகளை பிடுங்குவது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எந்த கட்சியும் தங்களுக்கான தொகுதிகளை குறைத்துக்கொள்ளவில்லை. மாறாக கூடுதல் தொகுதிகளைத்தான் கேட்கின்றன. எனவே தொகுதி பங்கீட்டில் தற்போது சலசலப்பு எழுந்திருக்கிறது. இப்பிரச்சனையை தீர்க்க கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications