‛உறுதி’.. பாசிச பாஜகவை எதிர்க்க ஒற்றுமை! நாங்கள் ரத்தம் சிந்தவும் தயார்! பாட்னாவில் முழங்கிய மம்தா
பாட்னா: பாசிச பாஜக எதிர்க்க நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். ஒன்றாகவே பாஜகவை எதிர்க்க உள்ளோம். நாங்கள் ரத்தம் சிந்தினாலும், நாட்டையும், மக்களையும் பாதுகாப்போம் என பாட்னாவில் இன்று நடந்த எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மம்தா பானர்ஜி முழங்கினார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு எதிராக வியூகம் வகுக்கும் வகையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமை வகித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்பட 16 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 4 மணிநேரத்துக்கும் அதிகமாக நடந்து முடிந்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது ஆலோசனை கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் தான் இன்றைய ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தலைவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛நாங்கள் மூன்று முக்கிய விஷயங்களை முடிவு செய்துள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒற்றுமையாக போராட உள்ளோம். பீகாரில் இருந்து தொடங்கிய வரலாறு காப்பாற்றப்பட வேண்டும். பீகாரில் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து மாற்றம் வேண்டும் என தொடங்கிய பீகாரின் வரலாற்றை காப்பாற்ற நாங்கள் விரும்புகிறோம்.
இந்த பாசிச அரசுக்கு எதிராக பேசுவதே எங்களின் நோக்கம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளோம். எங்களை எதிர்க்கட்சியினர் என அழைக்காதீர்கள். நாங்களும் இந்த நாட்டின் மக்கள் தான். பாஜகவின் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைந்து போராடுவோம். எங்கள் ரத்தம் சிந்தினாலும் பரவாயில்லை. ஆனால் மக்களையும் நாட்டையும் பாதுகாப்போம். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும்'' என்றார்.
பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்தது. முதல்வராக நிதிஷ் குமார் இருந்தார். அதன்பிறகு சமீபத்தில் பாஜகவை கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் கழற்றிவிட்டார். அதன்பிறகு காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்த நிலையில் மீண்தும் நிதிஷ் குமார் முதல்வராகி தொடர்ந்து வருகிறார்.
இதனை தான் மறைமுகமாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டு அனைத்து கட்சிகளும் பாஜகவை வீழ்த்த ஒற்றுமையாக செயல்பட உள்ளதாக இன்று பாட்னாவில் சூளுரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications