புதுச்சேரி போலீஸ் தேர்வில் ஒரே கிராமத்தில் 11 பேர் வெற்றி.. கிராம மக்கள் செஞ்சது பாண்டிக்கே பாடம்
புதுச்சேரி: புதுச்சேரியில் போலீஸ் தேர்வில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதனால் அந்த கிராமத்தினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். தேர்ச்சி பெற்றவர்கள் பொதுமக்கள், பெற்றோர் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்கள்.
புதுவை மாநிலத்தில் காவல்துறையில் உள்ள 253 காவலர் மற்றும் 26 ஓட்டுநர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் அண்மையில் நடந்தது. கடந்த மார்ச் மாதம் கோரிமேடு காவலர் பயிற்சிப் பள்ளியில் நடந்த உடற்தகுதித் தேர்வில் ஆண்கள், பெண்கள் என 6871 பேர் பங்கேற்றார்கள்.இதில் எழுத்துத் தேர்வுக்கு 3,107 பேர் தகுதி பெற்றார்கள்.

எழுத்துத் தேர்வு புதுச்சேரி மாநிலத்தில் 9 மையங்களில் நடைபெற்றன. அதில் ஆண்கள் 2065 பேரும், பெண்கள் 1003 பேரும் பங்கேற்று தேர்வெழு இருந்தார்கள். உடற்தகுதி, எழுத்துத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கூட்டப்பட்டு, தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை மாலை வெளியானது.அதன்படி ஆண்களில் 169 பேர் தேர்வாகி உள்ளார்கள் பெண்களில் 81 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
மொத்தம் உள்ள 253 பணியிடங்களுக்கான தேர்வுகளில் 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தொகுதியான மண்ணாடிப்பட்டிலுள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் 11 பேர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையொட்டி கிராம மக்கள் கேக் வெட்டி கொண்டாடினர். திருவிழா போல் கொண்டாடினார்கள்.
11 பேர் தேர்ச்சி பெற்றது மட்டுமில்லை. செட்டிப்பட்டு கிராமத்தில் இதுவரை 75 பேர் காவல்துறை பணியில் இன்ஸ்பெக்டர், உதவி இன்ஸ்பெக்டர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். இம்முறை கிராமத்தில் எம்சிஏ, பிஎச்டி, பட்டப்படிப்பு படித்த பலரும் தனியார் நிறுவன வேலையை விட்டு, விவசாய பணிக்கு சென்றவாரே படித்தனர். இதில் 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் காவல்துறை பணிக்கு தேர்வாகி சில ஆண்டுகள் பணியாற்றி அப்பணியை ராஜினாமா செய்துவிட்டு இத்தேர்வில் வென்றுள்ளவரும் உள்ளார்கள்.
புதுச்சேரியில் ஒரே கிராமத்தில் இருந்து 11 பேர் தேர்வானது அந்த கிராமத்தினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் பொதுமக்கள், பெற்றோர் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்கள். அந்த கிராமமே கொடுத்த ஊக்கம் தான் அந்த கிராமத்தில் பலரும் அரசு வேலையில் சேர காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி வெற்றி பெற்றவர்கள் கூறுகையில், ஊர் மக்கள் யாராக இருந்தாலும், நாங்கள் எங்காவது சென்றாலும் படிக்காமல் ஏன் இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பாங்க.. கட்டிட வேலை, வயல் வேலை, தனியார் நிறுவன வேலை என பல வேலைக்கு சென்றாலும் ஓய்வு நேரத்தில் படிச்சுக்கிட்டே இருப்போம். தேர்வான பலரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவங்க தான். எங்கள் ஊரில் அதிகமானோர் வென்றுள்ளது சந்தோஷமாக இருக்கு. இப்போது தோற்றவர்கள் அடுத்த முயற்சியில் வெல்வாங்க என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications