வேண்டாம்னு போய்டீங்கல்ல அப்புறம் எதுக்கு அரசியல் பேசறீங்க? நீங்கள் ஒரு ஜீரோ! ரஜினியை விமர்சித்த ரோஜா
புதுவை: ரஜினிகாந்த் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்க வேண்டும் என ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா காட்டமாக பேசியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த என்.டி. ராமாராவின் 100 ஆவது பிறந்த நாளையொட்டி ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் அங்கு சென்றார். அந்த விழாவில் என்.டி.ராமாராவின் திரைப்பயணம், அரசியல் பயணம் குறித்தெல்லாம் பேசினார்.

இதையடுத்து அவர் சந்திரபாபு நாயுடு குறித்தும் பேசியிருந்தார். அவர் பேசுகையில் சந்திரபாபு நாயுடுவிற்கும் எனக்கும் 30 ஆண்டு கால நட்பு உள்ளது. சந்திரபாபுவை எனக்கு அறிமுகப்படுத்தியதே என் நண்பர் மோகன்பாபுதான்.
அன்று முதல் நான் எப்போது ஹைதராபாத் சென்றாலும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவேன். அவரும் ஆண்டுதோறும் எனது பிறந்தநாளுக்கு மறக்காமல் வாழ்த்துகளை தெரிவிப்பார். அவருடன் பேசும் போது அறிவு தானாக அதிகரிக்கும். அந்த அளவிற்கு அவருடைய பேச்சில் ஏராளமான விஷயங்கள் அடங்கி இருக்கும். சந்திரபாபு அரசியலில் ஒரு தீர்க்கதரிசி.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை என்றாலே என்னவென விழிப்புணர்வு இல்லாத சமயத்தில் அந்த துறை குறித்து புரிந்து கொண்ட சந்திரபாபு நாயுடு தன்னுடைய ஆட்சி காலத்தில் ஹைதராபாத் நகரை ஹைடெக் சிட்டியாக மாற்றி ஐடி நிறுவனங்கள் தொழில் தொடங்க தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தார். அவருடைய ஆட்சியில்தான் ஹைதராபாத் நகரம் மாநகரமாக உருவெடுத்தது.
விஷன் 2020 என்ற திட்டத்தை அமல்படுத்தினார். அவருடைய முயற்சியின் காரணமாக ஐடி நிறுவனங்கள் மட்டும் சர்வதேச புகழ்வாய்ந்த ஐடி நிறுவனங்களும் தங்கள் கிளைகளை ஹைதராபாத்தில் திறந்தன. விஷன் 2047 என்ற திட்டத்துடன் 2047 ஆம் ஆண்டு ஆந்திரா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் இப்போதும் சந்திரபாபு நாயுடு அரசியலில் பணியாற்றி வருகிறார் என ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

இதற்கு நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சருமான ரோஜா செல்வமணி ஆட்சேபம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலில் ஜீரோ என காட்டமாக விமர்சித்துள்ள நடிகை ரோஜா, புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். புதுச்சேரி திருக்காஞ்சியில் நடைபெற்ற புஷ்கரணி விழாவில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் நடிகர் ரஜினி அரசியல் வேண்டாம் என முடிவு செய்த பின்னர் அரசியல் குறித்து அவர் பேசக் கூடாது. கடவுளாகப் பார்த்த என்.டி.ராமாராவுக்காக நடத்தப்பட்ட விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து தெரிந்தே தவறாக ரஜினி பேசியது நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.
என்.டி.ஆரை கொலை செய்ய திட்டம் போட்டவர்களை நல்லவர் என சொன்னது மட்டுமின்றி மேலே இருந்து சந்திரபாபுவை என்.டி.ஆர் ஆசிர்வாதம் செய்வார் என ரஜினிகாந்த் பேசியது மிகவும் தவறானது. ஆந்திராவில் உள்ளவர்கள் ரஜினியை சூப்பர்ஸ்டாராகவும் நல்ல நடிகராகவும் நினைத்திருந்தனர். ஆனால் ரஜினி இப்படி பேசியதால் என்.டி.ஆர். ரசிகர்கள் அவர் மீது கோபமாக உள்ளனர்.

ஆந்திர அரசியல் தெரியாமல் சந்திரபாபு நாயுடு கொடுத்த ஸ்கிரிப்ட்டை ரஜினி படிப்பது சரியானதாக இருக்காது. ரஜினி பேசியதால் இன்று அவர் ஜீரோவாகியுள்ளார். பிற மாநில அரசியல் தெரியாமல் இருக்கும் போது தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்க வேண்டும். சந்திரபாபு நாயுடு குறித்து பேசியது தொடர்பாக ரஜினி அறிக்கை கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆந்திராவில் 2024 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வார். இவ்வாறு நடிகை ரோஜா பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications