புதுச்சேரி கொடூரம்.. சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.
புதுச்சேரியின் முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்தார். வழக்கமாக பள்ளி முடித்துவிட்டு விளையாட செல்லும் அச்சிறுமி, இரவுக்குள் வீடு திரும்பிவிடுவது வழக்கம். ஆனால், சனிக்கிழமை அப்படி நடக்கவில்லை. மணி இரவு 8 ஆன பின்னரும் சிறுமி வீடு திரும்பியிருக்கவில்லை. பெற்றோர்கள் தேடுதலில் இறங்கியுள்ளனர். சிறுமியின் தோழி வீடு, தங்களது உறவினர்கள் வீடு என தேடாத இடமே கிடையாது.

ஆனால், சிறுமி கிடைக்கவே இல்லை. எனவே, உடனடியாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பதிவு செய்த போலீசார் சிறுமியை தேட தொடங்கியுள்ளனர். சிறுமி வழக்கமாக விளையாடும் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனாலும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
சிசிடிவி கேமராக்களை நம்பினால் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்த காவல்துறையினர் சிறுமியை கடைசியாக பார்த்த ஆட்களை விசாரிக்க தொடங்கினர். இதில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியாகின. எனவே முதற்கட்டமாக 7 பேரை பிடித்து விசாரணையை தொடங்கினர். விசாரணை நடந்துக்கொண்டிருக்க அம்பேத்கர் நகரில் உள்ள சாக்கடை ஒன்றில், மூட்டை இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சந்தேகத்தின் பேரில் மூட்டையை ஆய்வு செய்த போலீசார், மூட்டையில் இருப்பது சிறுமியின் சடலம் என்பதை உறுதி செய்தனர். கை, கால்கள் கட்டப்பட்டு, உடல் முழுக்க ரத்த காயங்களோடு சிறுமியின் உடல் கிடைத்திருக்கிறது. இந்த விஷயம் புதுவை முழுவதும் பரவிய நிலையில், சிறுமியை கொலை செய்தவரை கண்டுபிடிக்கக்கோரி காவல்துறையினருக்கு எதிராக உறவினர்களும், பொதுமக்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
சாலை, காவல் நிலையம், கடற்கரை என அனைத்து இடங்களிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால் காவல்துறையினர் லேசான லத்தியடியை பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறுபுறம் விசாரணை வளையத்தில் இருந்த 7 பேரில் இருவர் உண்மையை ஒப்புக்கொண்டனர்.
அதாவது, 60 வயதான விவேகானந்தன் எனும் முதியவர் சிறுமியை தனது வீட்டிற்கு கடத்தி சென்றிருக்கிறார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த அதிர்ச்சியில் சிறுமி மயங்கி விடவே, பதற்றமடைந்த விவேகானந்தன், 19 வயது இளைஞரான கருணாசுடன் இணைந்து சிறுமியை கொலை செய்து, உடலை சாக்கு பையில் கட்டி சாக்கடையில் வீசியுள்ளார். இவை அனைத்தையும் இருவரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது போக்சோ வழக்கை பதிந்துள்ளனர். 9 வயதே ஆன சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுமி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications