உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர
புதுச்சேரி: புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி தொடர்கிறது.. நேற்றைய தினம் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது இறுதியான போதிலும், யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், இழுபறி நீடிப்பதால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் போலவே யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெறுகிறது. எப்போதும் தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நாளிலேயே புதுச்சேரியிலும் தேர்தல் நடத்தப்படும் சூழலில், இந்த முறை தனித்தனியாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி
அதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். புதுச்சேரியில் என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்து, வேட்புமனு தாக்கல் எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது. ஆனால், இந்தியா கூட்டணியில் அங்குத் தொடக்கத்திலேயே இருந்தே குழப்பம் நீடிக்கிறது. அங்குக் காங்கிரஸ் உடன் ஜெகத்ரட்சகன் தலைமையில் திமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அங்கு திமுக தரப்பில் முதலில் 15 முதல் 17 தொகுதிகள் வரை கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அவ்வளவு தொகுதிகளைக் கொடுக்க காங்கிரஸ் ரெடியாக இல்லை. தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதால் தொகுதிகளைக் குறைத்துக் கொள்ளக் காங்கிரஸ் கேட்டது. இதில் இழுபறி நீடித்த சூழலில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் நேற்று இதில் நேரடியாகத் தலையிட்டார். நேற்றைய தினம் காங்கிரஸின் மூத்த தலைவர் ப. சிதம்பரமும் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருந்தார்.
தொடரும் குழப்பம்
அதைத் தொடர்ந்து எந்த கட்சிக்கு எவ்வளவு சீட் என்பது இறுதியானது. அதன்படி காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 12 தொகுதிகளிலும் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவுக்கு தலா ஒரு தொகுதிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. நம்பர் இறுதியான போதிலும் எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பதில் இழுபறி தொடர்கிறது.
இது தொடர்பாக இறுதி செய்ய நேற்று புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நள்ளிரவைத் தாண்டியும் இந்த பேச்சுவார்த்தை நடந்த போதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. காங்கிரஸ் பலமாக இருக்கும் தொகுதிகளை திமுக கேட்பதாகவும் திமுக பலமாக இருக்கும் தொகுதிகளைக் காங்கிரஸ் கேட்பதாக இரு தரப்புமே மாறி மாறி குற்றஞ்சாட்டுகிறது.
கோபம்
குறிப்பாக மாஜி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி போட்டியிட விரும்பும் நெல்லித்தோப்பு திமுக கேட்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க ரெடியாக இல்லை. இது தொடர்பாக இரு தரப்பும் பேசியிருக்கிறது. இதில் உடன்பாடு எட்டப்படாத சூழலில், நாராயணசாமி கோபத்துடன் வெளியேறினார். தொடர்ந்து திமுகவும் கோபத்துடன் வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது.
உடையும் கூட்டணி?
இன்றுடன் அங்கு வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் முடியும் சூழலில், இன்னும் உடன்பாடு எட்டப்படாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே யாருக்கு எந்த தொகுதி என்பதில் தெளிவு இல்லாததால் இரு தரப்புமே 30 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற மார்ச் 26ம் தேதி கடைசி நாளாக இருக்கும் சூழலில், அதுவரை பேச்சுவார்த்தை தொடரும் எனக் கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. அதற்குள் கூட உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடும் சூழல் கூட உருவாகலாம்!












Click it and Unblock the Notifications