‛தேநீர் விருந்து’.. புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு ஷாக் தந்த திமுக + 3 கூட்டணி கட்சிகள்.. என்னாச்சு?
புதுச்சேரி: குடியரசு தினவிழாவையொட்டி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவந்தரராஜன் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஷாக் கொடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அதாவது என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உள்ளதால் துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செயல்பட்டு வருகிறார். தெலுங்கானா ஆளுநர் பதவியுடன் இந்த பொறுப்பையும் கூடுதலாக நிர்வகித்து வருகிறார்.
பொதுவாக குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் மாளிகை சார்பில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது மரபாக கடைப்பிடித்து வருகிறது. அதன்படி வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் தான் தமிழிசை சவுந்தரராஜனின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. புதுச்சேரியில் பிரதான எதிர்க்கட்சி தலைவரான சிவா கூறுகையில், ‛‛மூடப்பட்டுள்ள பஞ்சாலை திறக்கப்படவில்லை. ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. அதேபோல் புதுச்சேரி அரசு எந்த திட்டங்களையும் செய்யவில்லை. ஆளுநர் தனது பணியை செய்யாமல் அரசியல் செய்து வருகிறார். இதனால் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் வைத்தியநாதன் அறிவித்துள்ளார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகளும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தேநீர் விருந்தில் பங்கேற்க போவது இல்லை என தெரிவித்துள்ளன.
இந்த எதிர்க்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது இது முதல் முயைல்ல. இதற்கு முன்பாக கடந்த ஆண்டும் இந்த கட்சிகள் தமிழிசை சவுந்தரராஜனின் தேநீர் விருந்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications