எம்.எல்.ஏ வீடுகளுக்கு ரெய்டு போன ED ஆபீசர்.. நையப்புடைத்து அனுப்பிய ஆதரவாளர்கள்.. நடந்தது என்ன?
புதுச்சேரி: அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு பாஜக மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் 4 பேரின் வீடுகளுக்கு ரெய்டு சென்ற சென்னை இளைஞரை அடித்துத் துவைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கரன், காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், என்.ஆர் காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு ஆகியோரை இன்று மாலை தொடர்பு கொண்ட ஒரு நபர், தான் அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறி, நீங்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளீரகள், அதிகளவில் பணப் பரிமாற்றம் செய்துள்ளீர்கள் எனவே உங்கள் வீடுகளுக்கு ரெய்டு வரவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் முதல் தெருவில் உள்ள பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கரன் வீட்டுக்கு டிப்-டாப்பாக சென்றுள்ளார். ஆனால் அந்த நபர் மீது சந்தேகமடைந்த சிவசங்கரன் இது பற்றி ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த சிவசங்கரன் ஆதரவாளர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் போலி அமலாக்கத்துறை அதிகாரி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை நையப்புடைத்த எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், நேரு உள்ளிட்டோரும் அங்கு வந்தனர். அந்த நபர் தங்களுக்கும் போன் செய்து ரெய்டு வரப்போவதாக மிரட்டியதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த வரதராஜன் (35) என்பது தெரியவந்தது. புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவர் உருளையன்பேட்டை பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். தொடர்ந்து வாடகை மோட்டார் சைக்கிள் எடுத்துக்கொண்டு பல்வேறு இடங்களை சுற்றி் பார்த்த இவர், கூகுள் வாயிலாக புதுச்சேரி எம்எல்ஏக்களின் தொடர்பு எண் மற்றும் வீட்டின் முகவரியை சேகரித்துள்ளார்.
தொடர்ந்து அவர்களுக்கு போன் செய்து அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ வீட்டுக்கு நேரில் சென்றபோது, மாட்டி அடி வாங்கியுள்ளார். தொடர்ந்து அவரிடம் ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மைக்காலமாக, அமலாக்கத்துறை அதிகாரிகளின் ரெய்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை ரெய்டு பயத்தைக் காட்டி பணம் கறக்கலாம் என திட்டம் போட்டு இறங்கிய சென்னை இளைஞர் தர்ம அடி வாங்கி போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications