புதுச்சேரியில் 'சம்பவம்' வெயிட்டிங் போல.. 'மதுபான' ஆலை அனுமதி- திமுக மவுனம்; காங்கிரஸ் வெளிநடப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபையில் தனியார் மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்குவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது; ஆனால் திமுக இந்த விவகாரத்தில் கனத்த மவுனம் காத்தது 'இந்தியா' கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் தற்போது முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடம் பெற்றுள்ளன.

புதுச்சேரி சட்டசபை தொடர்பாக இந்தியா கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அண்மையில், புதுவையில் திமுக தனித்துப் போட்டியிட விரும்பினால் போட்டியிடலாம்; காங்கிரஸ் அதைப் பற்றி கவலைப்படாது என்றார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தலைமையில்தான் இந்தியா கூட்டணி என்பதில் அக்கட்சி திட்டவட்டமாக இருக்கிறது.
இதனிடையே புதுச்சேரி சட்டசபையில் நேற்று பேசிய முதல்வர் ரங்கசாமி, பாஜக மிக கடுமையாக எதிர்க்கும் திமுக தலைவரான மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். புதுச்சேரியில் கருணாநிதி சிலை விரைவில் அமைக்கப்படும்; புதுச்சேரியில் சாலை ஒன்றுக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் கூடுதலாக தனியார் மதுபான ஆலைகள் தொடங்குவதற்கு முதல்வர் ரங்கசாமி அனுமதி அளித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. புதுவை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியின் இந்த நிலைப்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்த காங்கிரஸ், வெளிநடப்பும் செய்தது. ஆனால் திமுகவே இந்த விவகாரத்தில் கனத்த மவுனம் காத்தது. இது காங்கிரஸ் கட்சியினரை கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு ஆலோசகராக இருக்கிறார் என கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாஜகவுடன் பல்வேறு பிரச்சனைகளில் முதல்வர் ரங்கசாமி அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கருணாநிதி பெயரை சூட்டுவதாக ரங்கசாமி அறிவிப்பதும், ரங்கசாமியின் மதுபான ஆலை அனுமதி விவகாரத்தில் திமுக மவுனம் காப்பதும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை முன்வைத்து பல்வேறு யூகங்களையும் கிளப்பிவிட்டிருக்கின்றன.
புதுச்சேரியில் சம்பவம் காத்திருக்கிறது போல!












Click it and Unblock the Notifications