கணவருடன் கருத்துவேறுபாடு.. ஹவுஸ்ஓனருடன் சண்டை.. 5 வயது பெண் குழந்தை கன்னத்தில் பளார் என அறைந்த தாய்!
புதுவை: புதுச்சேரியில் 5 வயது பெண் குழந்தையை தாய் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி காவல் துறையின் (IRBN) பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் கணேஷ். இவருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சாந்தி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மேலும் இவர்களுக்கு வர்னிகா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தனித்தனியாக வாழ்க்கை
இதனால் கணேஷும் சாந்தியும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதேபோல் நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கணவனை பிரிந்து சாந்தி தனது தாய் மற்றும் மகள் வர்னிகாவுடன் வசித்து வருகிறார்.

குழந்தையை துன்புறுத்திய தாய்
இந்த நிலையில் அவர் குழந்தையை அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யாரோ ஒரு பெண் சாந்தியுடன் பேசுவது போல் உள்ளது. மிகவும் கோபத்துடனேயே சாந்தி அந்த பெண்ணிடம் பேசுகிறார். அப்போது படுப்பதற்கு பாய், தலையணை தயாராக இருக்கிறது.

குழந்தையின் கன்னத்தில் அறை
குழந்தை வர்னிகா பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். நாளை காலையில் கதவை பூட்டி விடுகிறேன் என்கிறார். அதற்கு சாந்தி அந்த குழந்தையின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, எப்படியோ போய் தொலை, செத்து தொலை என கூறி பெட்ஷீட்டை போர்த்திக் கொண்டு படுக்கிறார். மீண்டும் அந்த பெண் நாளை காலை கதவை பூட்டி விடுகிறேன் என்றார்.

கோபம்
அப்போது படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் அந்த சாந்தி என்னாது பூட்ட விட முடியாது என்ன பண்ணுவ என கேட்கிறார். சண்டை என்கிட்ட போடாதே என்கிறார் அந்த பெண். அதற்கு சாந்தி, இத பாரு, இதெல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயம். நான் வீடு தேடும் வரை கொஞ்ச நேரம் அமைதியா இரு என்கிறார் சாந்தி.

மீண்டும் ஒரு அறை விட்ட சாந்தி
மீண்டும் அந்த பெண் விடாமல் நாளை காலை 9.30 மணிக்கெல்லாம் கதவை பூட்டிடுவேன் என்கிறார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சாந்தி, ஏ பூட்டினு போடி என கூறி கெட்ட வார்த்தைகளை பேசுகிறார். மீண்டும் அந்த பெண் கதவு பூட்டுவது குறித்து பேச அந்த குழந்தைக்கு பளார் என கன்னத்தில் அறைந்துவிட்டு படு என்கிறார். மறுமுனையில் பேசும் பெண் வீட்டு உரிமையாளர் போல் தெரிகிறது. கணவர் மீது இருக்கும் கோபத்தை ஒன்றும் அறியாத அந்த குழந்தை மீது காட்டுவது அந்த வீடியோவை பார்த்தாலே தெரிகிறது. அந்த குழந்தைக்கு விழும் அறையை பார்க்கும் போது நம் கன்னத்தில் அடிப்பது போல் சிலிர்க்கிறது, மனம் வலிக்கிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் குழந்தையை மீட்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications