ராத்திரி ஜெயிலர் படத்துக்கு போன மருமகன்.. வீட்டில் மாமியார் செய்த காரியம்.. அரண்டுபோன புதுச்சேரி
புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவியுடன் ஜெயிலர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய மருமகன், மாமியார் கள்ளக்காதலனுடன் இருந்ததை கேட்டு ஆத்திரம் அடைந்தார். மாமியாரின் கள்ளக்காதலை மருமகன் தட்டிக்கேட்டார். இதனால் கோபம் அடைந்து மாமியாரின் கள்ளக்காதலன் மருமகனை கத்தியால குத்திக் கொன்றுவிட்டார்.
புதுச்சேரியில் உள்ள குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் 23 வயதாகும் முகுந்தன் அதே பகுதியை சேர்ந்த 18 வயதாகும் ரம்யா என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் கலைவாணர் நகரில் முகுந்தனின் மாமியார் கோமதி வீடு எடுத்து வசித்து வருகிறார். அந்த வீட்டின் எதிரிலேயே கல்யாணத்திற்கு பிறகு முகுந்தன் ரம்யா தம்பதி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் கோமதிக்கும், குருசுக்குப்பத்தை சேர்ந்த தேவா (23) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளதாம். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தார்களாம். இது ஒரு கட்டத்தில் எதிர் வீட்டில் இருந்த மருமகன் முகுந்தனுக்கு தெரியவந்தது. இதையடுத்து தேவா மற்றும் கோமதியை கடுமையாக கண்டித்து எச்சரித்து உள்ளார். இந்த விவகாரத்தில் தேவாவுக்கு முகுந்தன் மீது விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு முகுந்தன் மனைவி ரம்யாவுடன் புதுச்சேரியில் ஒரு திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் பார்த்துள்ளார். வீட்டின் முன்பு தனது பைக்கினை நிறுத்திவிட்டு மாமியாரின் வீட்டிற்குள் மனைவியுடன் முகுந்தன் சென்றுள்ளார். அப்போது மாமியாரின் வீட்டில் தேவா இருந்திருக்கிறார் இதனால் ஆத்திரம் அடைந்த முகுந்தன் கோமதி மற்றும் தேவாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால் கோபம் அடைந்த தேவா சனிக்கிழமை இரவு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
இரவு முழுவதும் கடும் கோபத்தில் இருந்த தேவா ஞாயிறு அதிகாலை 4 மணியளவில் மீண்டும் முகுந்தனின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கதவை தட்டி அவரை எழுப்பி, என்னை, தட்டிக்கேட்க நீ யாரு? என்று ஆவேசமாக திட்டியபடி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகுந்தனை சரமாரியாக குத்தி உள்ளார்.இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே முகுந்தன் இறந்துபோனார். இதையடுத்து தேவா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தன் கணவனை ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரம்யா, அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனிடையே அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று முகுந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் பதுங்கி இருந்த தேவாவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாமியாரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications