மைனஸ் எலும்புக் கூடு.. பிளஸ் எலும்புக் கூடு.. வீடுகளில் மர்ம படங்கள்.. புதுவை மக்கள் அச்சம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் வீடுகளில் மர்மமான முறையில் வரையப்பட்டுள்ள பொம்மை படங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது வடமாநில கொள்ளையர்களின் வேலையா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில கும்பலை சேர்ந்தவர்கள் பகல் நேரத்தில் வியாபாரிகள் போல் வந்து நோட்டமிட்டு ஆள் இல்லாத வீடுகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் தனியாக வசித்துவரும் வீடுகளில் மர்மமான முறையில் குறியீடுகளை வரைந்து விட்டு செல்கிறார்கள். பின்னர் இரவு நேரத்தில் அந்த வீடுகளில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.

புதுச்சேரியில் சமீப காலமாக வட மாநில கும்பல் பல இடங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் குறித்து போலீசார் உஷார்படுத்தி வரும் நிலையில், புதுச்சேரி சாரம் சுப்ரமணிய சுவாமி கோவில் வீதியில் சிலரது வீடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொம்மை போன்ற உருவ படங்கள் வரையப்பட்டிருந்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இந்த நிலையில் அதேபகுதியில் தற்போது மீண்டும் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் மஞ்சள், நீலம், சிவப்பு, ஊதா, ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் பொம்மை படங்கள் வரையப்பட்டுள்ளன. அந்த பொம்மை உருவங்களுடன் பிளஸ் மற்றும் மைனஸ் குறியீடுகளும் உள்ளன. திடீரென்று சுவர்களில் வரையப்பட்டிருக்கும் இந்த படங்களால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகலறிந்த கோரிமேடு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதியில் உள்ள கண்கானிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.













Click it and Unblock the Notifications