பெண்களுக்கு ரூ.1000: தமிழிசை சொல்வது அப்பட்டமான பொய்.. நிரூபிச்சா பதவி விலக தயாரா? நாராயணசாமி சவால்!
புதுச்சேரி: மகளிர் உதவித்தொகை விவகாரத்தில் 75,000 பேருக்கு புதுச்சேரியில் ரூ.1000 கொடுத்ததாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அப்பட்டமாக பொய் சொல்கிறார் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், "நம் புதுச்சேரியில் அதற்கு முன்பே ஆரம்பித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 75000 பெண்களுக்கு ரூ.1000 கொடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜி-20 மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டு பெருமை சேர்த்தனர். சீனா, ரஷ்யா உள்ளிட்ட பெரிய நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்திய வெளியுறவு கொள்கையில், மத்திய அரசு கவிழ்ந்து விட்டதோ என தோன்றுகிறது. ஜி-20 மாநாடு பிரதமருக்கு கிடைத்த வெற்றி என பறைசாற்றுவது கண்டிக்கத்தக்கது.
மோடி ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு காங்கிரஸ் சார்பில் வெளியிட்டால்கூட பிரதமர் மோடி, பாஜக தரப்பில் எந்த பதிலும் தருவதில்லை. சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிட்ட ஊழல் குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை. ஒரு கி.மீ சாலை போட ரூ.528 கோடி, ஒரு செல்போன் எண்ணில் 9 லட்சம் பேருக்கு ஆயுள் காப்பீடு, இறந்தவருக்கு சிகிச்சை அளித்ததாக பணம் தரப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி மோசடிகள் குறித்து மக்கள் மன்றத்தில் மோடி அரசு பதில் கூற வேண்டும்.
எங்களது ஆட்சி காலத்தில் டெங்கு காய்ச்சல் வருவதற்கு முன்பு தனி வார்டு அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தோம். அதனால் உயிர் பலிகள் ஏற்படவில்லை. ஆனால் தற்போதைய அரசின் மெத்தனப் போக்கால் 2 உயிர்கள் பலியாகியுள்ளன. மருந்து தெளிப்பது, பரிசோதனை செய்வது போன்ற நடவடிக்கைகளை காலம் கடந்து இப்போதுதான் செய்து வருகின்றனர். நிபா வைரஸ் என்பது மிகக் கொடிய நோய். கொரோனாவை விட கொடியது. எனவே நிபா வைரஸ் பரவாமல் இருக்க மாஹே நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நிரந்தரமாக புதுச்சேரியில் தங்கியுள்ளார். புதுவையிலிருந்து தமிழ்நாடு அரசை விமர்சிப்பது, குறைகூறுவது என செயல்பட்டு வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 69 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். தமிழ்நாட்டில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த உரிமைத் தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
புதுச்சேரியில் 75,000 பேருக்கு அறிவித்தபடி ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு காலம் கடந்து கொடுப்பதாகவும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். அவர் கூறுவது அப்பட்டமான பொய். கடந்த மார்ச் மாதம் அறிவித்த இந்த திட்டத்தை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. அறிவித்த போது 1,000 பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. 75,000 பேருக்கு கொடுத்ததாக ஆளுநர் கூறுவது உண்மைக்கு புறம்பானது.
ஆளுநர் தமிழிசை கூறியது பொய் என்று நிரூபிக்கப்பட்டால் புதுச்சேரி ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்ய தமிழிசை தயாரா? பாஜகவினர் பொய் சொல்வதில் கைதேர்ந்தவர்கள். அதில் தமிழிசையும் ஒருவர். நாடாளுமன்ற தேர்தலில் நிற்பதற்காக இது போன்ற சர்ச்சைக்குரிய வகையில் பேசி மக்கள் மத்தியில் இடம்பிடிக்க ஆளுநர் தமிழிசை முயற்சி செய்து வருகிறார். தேர்தலில் நின்றால் அவர் போணியாக மாட்டார். ஏற்கனவே அவர் தேர்தலில் நின்று டெபாசிட் வாங்காதவர். வரும் நாடாளுமன்ற தேர்தலோடு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்" என காட்டமாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications