மூதாட்டியின் காதை அறுத்து ஒன்றரை பவுன் தோடு திருட்டு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
புதுச்சேரி: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதை அறுத்து ஒன்றரை பவுன் தோடு கொள்ளையடிக்கள்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் நாவற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கல்யாணி. இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்த அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில், மூதாட்டி கல்யாணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டி அணிந்திருந்த ஒன்றரை பவுன் தோட்டை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது மூதாட்டி தடுக்க முயன்றபோது, மர்ம நபர்கள் தோடை பிடித்து பலமாக இழுத்துள்ளனர். இதில் மூதாட்டிக்கு காது அறுத்து ரத்தம் கொட்டியது. மேலும் மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க மர்ம நபர்கள் மூதாட்டியை தலையனை வைத்து அமுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
பின்னர் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மூதாட்டி கல்யாணி காதில் ரத்தம் வழித்தபடி மயக்க நிலையில் கீழே விழுந்து கிடந்தார். இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து மூதாட்டியின் உறவினர்கள் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். நகைக்காக மூதாட்டியின் காதை அறுத்து, அவரை தலையணையால் அமுக்கி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications