‛தமிழிசைக்கு எதிராக கோஷம்’.. புதுச்சேரியில் சிறுமிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது எதிர்ப்பு - பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியின் முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்தார். எப்போதும் பள்ளி முடித்துவிட்டு விளையாட செல்லும் அச்சிறுமி, இரவுக்குள் வீடு திரும்பிவிடுவது வழக்கம். ஆனால், சனிக்கிழமை அவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் உடனடியாக சிறுமியின் பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பதிவு செய்த போலீசார் சிறுமியை தேட தொடங்கியுள்ளனர். சிறுமி வழக்கமாக விளையாடும் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனாலும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சந்தேகத்தின் பேரில் முதற்கட்டமாக 7 பேரை பிடித்து விசாரணையை தொடங்கினர்.
ஒருபுறம் விசாரணை நடந்துக்கொண்டிருக்கையில், மறுபுறம் அம்பேத்கர் நகரில் உள்ள சாக்கடை ஒன்றில், மூட்டை இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மூட்டையை ஆய்வு செய்த போலீசார், மூட்டையில் இருப்பது சிறுமியின் சடலம் என்பதை உறுதி செய்தனர். கை, கால்கள் கட்டப்பட்டு, உடல் முழுக்க ரத்த காயங்களோடு சிறுமியின் உடல் கிடைத்திருக்கிறது.
இந்த விஷயம் புதுவை முழுவதும் பரவிய நிலையில், சிறுமியை கொலை செய்தவரை கண்டுபிடிக்கக்கோரி காவல்துறையினருக்கு எதிராக உறவினர்களும், பொதுமக்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். சாலை, காவல் நிலையம், கடற்கரை என அனைத்து இடங்களிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால் காவல்துறையினர் லேசான லத்தியடியை பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறுபுறம் விசாரணை வளையத்தில் இருந்த 7 பேரில் இருவர் உண்மையை ஒப்புக்கொண்டனர். அதாவது, 60 வயதான விவேகானந்தன் எனும் முதியவர் சிறுமியை தனது வீட்டிற்கு கடத்தி சென்றிருக்கிறார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த அதிர்ச்சியில் சிறுமி மயங்கி விடவே, பதற்றமடைந்த விவேகானந்தன், 19 வயது இளைஞரான கருணாசுடன் இணைந்து சிறுமியை கொலை செய்து, உடலை சாக்கு பையில் கட்டி சாக்கடையில் வீசியுள்ளார். இவை அனைத்தையும் இருவரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது போக்சோ வழக்கை பதிந்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ரங்கசாமி, ரூ.20 லட்சத்தை நிவாரணமாக அறிவித்தார். இருப்பினும் சிறுமியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்தனர். பெற்றோருடன் அரசு தரப்பில் நீண்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பிறகு உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆளுநர் தமிழிசைக்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சோலைநகரில் சிறுமியின் உடலுக்கு ஆளுநர் தமிழிசை அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரை சூழ்ந்துக்கொண்ட பொதுமக்கள் ஆளுநரே வெளியேறு என்று முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications