மாமியாருடன் தகாத உறவு.. சுத்தியலுடன் வீட்டிற்குள் போன மருமகன்...நண்பனுக்கு நடந்த பயங்கரம்
புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஆரோவில் பகுதியில் மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பரை அடித்துக் கொல்ல முயன்ற மருமகனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்தை மீறிய உறவு சமூகத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த கள்ளத்தொடர்பு பல குடும்பங்களை அழித்து வருகிறது. பல குற்றச் சம்பவங்கள் இதனால் நடக்கிறது. பெரும்பாலான குடும்ப வன்முறை சம்பவங்களுக்கு கள்ளத்தொடர்பு முக்கிய காரணமாகவும் இருக்கிறது. புதுச்சேரியில் அப்படி நடந்த ஒரு சம்பவம் பற்றி பார்ப்போம்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே மொரட்டாண்டி சனிஸ்வர பகவான் கோவில் பகுதியில் வசிப்பவர் துரைசாமி . இவரது மகன் கோபி (வயது 26 ). இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதே மொரடாண்டி காலனி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் தனசேகர் மகன் கவுதம், (வயது 22 ) வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கோபியும் கௌதமும் நண்பர்கள் ஆவர்.
கடந்த 19ம் தேதி இரவு கோபி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த கவுதம், கோபியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து விட்டு திரும்பி இருக்கிறார். திடீரென கவுதம் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால், கோபியை தலையில் பின்பக்கமாக பயங்கரமாக பலமுறை தாக்கி உள்ளார். அதில் வீட்டு வாசலில் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் கோபி சரிந்து விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கவுதம் தப்பி ஓடிவிட்டார்.
இதனிடையே அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வந்து பார்த்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர்கள் உடனடியாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த கோபியை மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணை மேற்கொண்டதில் கவுதமின் மாமியாரான சசிகலா (வயது 40) அதே பகுதியில் இரவு நேர உணவகத்தை நடத்தி வருகிறார். சசிகலாவுக்கும் திருமணமாகாத கோபிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாம். இதையறிந்த கவுதம், கோபியிடம் பலமுறை எச்சரித்தாராம். ஆனால் அவர்களின் கள்ளத் தொடர்பு நீடித்ததால், ஆத்திரமடைந்த கவுதம்,கோபியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்ய முயற்சித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது..பலத்த காயமடைந்த கோபி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனயில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இதனிடையே கவுதம், புதுச்சேரி தன்வந்தரி நகர் போலீசில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, சரணடைந்த கவுதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை மருமகன் அடித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் புதுச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications