புதுச்சேரி கோரக் கொலை.. பாஜக தலைவர் சோழன் அதிரடி கைது.. டாப் 10 ரவுடிகளில் ஒருவர்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த பயங்கர கொலை சம்பவத்தில் தொடர்புடைய பாஜக தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு காலாப்பட்டு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மற்றொரு காங்கிரஸ் பிரமுகரான சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று தனது மாமனார் வீட்டில் பாதுகாப்பாக வசித்து வந்தார்.

இந்நிலையில் சந்திரசேகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனகசெட்டிகுளம் பகுதியில் துக்க நிகழ்ச்சிக்காக தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி சுகன் தலைமையிலான நான்குபேர் கொண்ட கும்பல் பிம்ஸ் மருத்துவமனை சாலையில் சந்திரசேகர் மீது வெடிகுண்டு வீசியும், அறிவாளால் வெட்டியும் மனைவியின் கண்முன்னே படுகொலை செய்தனர்.

இந்த கொலை குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் ரவுடி சுகன் மற்றும் அவனது கூட்டாளிகளான ரங்கராஜ், அப்துல் நசீர் ஆகிய மூன்று பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதையடுத்து சுகன் மற்றும் அவனது கூட்டாளிகளை காலாப்பட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சோழன் என்பவரின் உத்தரவின்பேரில் சந்திரசேகரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சோழனை தற்போது தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவனது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சோழன், புதுச்சேரி மாநில பாஜக வர்த்தக அணி தலைவர் ஆவார். மேலும் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் டாப் டென் ரவுடி பட்டியலிலும் சோழன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் பாஜகவின் முக்கிய நிர்வாகி ஈடுபட்டிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரவுடிகள் தங்களை தற்காத்துகொள்ள அரசியல் கட்சிகளில் சேர்ந்து பணியாற்றுவது இச்சம்பவம் மூலம் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications