சிவப்பு, மஞ்சள் ரேசன்கார்டுகளுக்கு கேஸ் சிலிண்டர் மானியம்..அரசாணை வெளியிட்ட புதுச்சேரி ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 300 சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு 300 ரூபாயும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 150 ரூபாயும் சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லத்தரசிகளுக்கு கேஸ் விலை தான் இப்போது முக்கிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இப்போது தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் ரூ. 1,100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. கேஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் அளித்தே வருகிறது. முதலில் மானியத்தை அரசு நிறுவனங்களுக்குச் செலுத்திவிடும். மக்கள் குறைந்த விலையில் கேஸ் சிலிண்டரை பெறலாம் என்ற நிலை இருந்தது.

பாஜக ஆட்சியில் அந்த முறை மாற்றப்பட்டது. மானியம் நேரடியாகப் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. முதலில் வழக்கம் போலவே மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு மானிய தொகை கணிசமாகக் குறைக்கப்பட்டே வருகிறது. தற்போது மிக சொற்பமான அளவே வங்கிக்கணக்கில் மானியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
கேஸ் சிலிண்டருக்கு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திலேயே, இல்லத்தரசிகளைக் கவரும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு தமிழக அரசு தரப்பில் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த வாக்குறுதி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழக அரசு அது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இதனிடையே புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அம்மாநில முதல்வரும் நிதியமைச்சருமான ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம், இலவச மடிக்கனிணி, சிறுதானிய சிற்றுண்டி, முதியோர் ஓய்வூதியம் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
அதில் முக்கியமானதாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு மக்களிடையே குறிப்பாக இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. இந்தநிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 300 சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு 300 ரூபாயும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 150 ரூபாயும் சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 76 லட்சம் குடும்பங்களுக்கு ராஜஸ்தான் அரசு சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியத்தைப் பெறலாம். கடந்த பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பை ராஜஸ்தான் அரசு வெளியிட்டது. அதேபோல தமிழ்நாட்டிலும் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் 100 ரூபாய் மாநில அரசு சார்பில் மானியம் அளிக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications