சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது.. வார்னிங் கொடுத்த அரசு
புதுச்சேரி: புதுச்சேரி அரசுத்துறைகள், அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் தங்களது அசையா சொத்து கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று புதுச்சேரி தலைமை கண்காணிப்பகம் அறிவுறுத்தி இருந்தது. இந்த கணக்கு விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது.
அரசு ஊழியர்கள் பொதுவாக சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு மாநில அரசுகளும் கேட்பது உண்டு. அப்படி சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வைப்பதன் மூலம் ஊழல் செய்வது, லஞ்சம் வாங்கி சொத்த சேர்ப்பதை ஓரளவு தடுக்க முடியும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களில் தவறு இருந்தால் அவர்கள் மீது எளிதாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை பல மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது.

அந்த வகையில் புதுச்சேரி அரசுத்துறைகள், அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் தங்களது அசையா சொத்து கணக்கு விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று புதுச்சேரி தலைமை கண்காணிப்பகம் அறிவுறுத்தியது. ஆனால் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பெரும்பாலானவர்கள் தங்களது கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் கண்ணன் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறுகையில், "வருகிற 31-ந்தேதிக்குள் அதிகாரிகள் தங்களது அசையா சொத்து விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. ஆன்லைன் சமர்ப்பிப்பின் நிலையை ஆய்வு செய்ததில் பல அதிகாரிகள் இன்னும் தங்களது சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.
அனைத்துத்துறை அதிகாரிகளும் தங்கள் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு கடைசி தேதிக்கு முன்பே விவரங்களை சமர்ப்பிக்க தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் விவரங்களை சமர்ப்பிக்க தவறினால் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து விதமான பயன்களுக்கும் அரசின் தலைமை கண்காணிப்பக அனுமதி வழங்கப்படமாட்டாது" இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications