யாரையும் கொல்லலாம்! அப்பறம் வெளியே வரலாமா? 7 பேர் விடுதலைக்கு எதிராக கம்பு சுழற்றும் காங். நாராயணசாமி
புதுச்சேரி : ராஜீவ்காந்தி வழக்கில் கைதானவர்களுக்கு தூக்கு தண்டனையை,ஆயுள் தண்டனையாக மாற்றி தற்போது உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது ஏற்புடையதாக இல்லை எனவும், அவர்களது விடுதலையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமென புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப் போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி உள்ளிட்ட ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.
இதனைத் தொடந்து நேற்று நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

7 பேர் விடுதலை
30 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை பெற்றுள்ள நளினி உள்ளிட்டோர் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறது. முன்னதாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட போதே காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேர் தற்போது மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி விமர்சித்து இருந்தார்.

காங்கிரஸ் எதிர்ப்பு
இந்நிலையில் ராஜீவ்காந்தி வழக்கில் கைதானவர்களுக்கு தூக்கு தண்டனையை,ஆயுள் தண்டனையாக மாற்றி தற்போது உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது ஏற்புடையதாக இல்லை எனவும், அவர்களது விடுதலையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமென புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலையில், அந்த 7 பேருக்கும் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

நாராயணசாமி
அது தமிழக அரசால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இவர்கள் தமிழக ஆளுநருக்கு தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால் பின் அந்த கோப்பு குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு அதனை குடியரசு தலைவர் நிராகரித்தார்.மீண்டும் கொடுத்த மனுவை ஆளுநர் காலதாமதப்படுத்தினார் என உச்சநீதிமன்றம் ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்தனர். இதனை மேற்கோள் காட்டி மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்ய வேண்டும் என கோரியதால் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மன வேதனை
இந்த விடுதலையானது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எங்களுக்கு அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். ஆளுநர் உரிய நேரத்தில் முடிவெடுக்காததால் விடுதலை செய்ய ஏதுவாக இருந்துள்ளது. பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி, தற்போது விடுதலை செய்வது ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. நீதிமன்றம் தீர்ப்பை, நீதிமன்றமே மாற்றுகிறது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.

மறு சீராய்வு மனு
தீவிரவாதிகள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். பின்னர் நாம் வெளியே வரலாம் என்ற மனபோக்கை இந்த தீர்ப்பு ஏற்படுத்துகிறது. இதனை ஒரு சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றது. மத்திய அரசு 7 பேர் விடுதலை குறித்து உடனடியாக மறு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து அவர்களின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்" என ஆவேசமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications