புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை.. தேர்தலால் மாணவர்கள் குஷி!
புதுச்சேரி: சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக புதுச்சேரியில் ஏப்ரல் 7, 8, 9, 10 ஆகிய நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேசமயம் சிபிஎஸ்சி தேர்வுகள் சிபிஎஸ்சி வாரியத்தின் கால அட்டவணைப்படி எந்த மாற்றமும் இன்றி நடைபெறும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தன்றே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 24 ஆம் தேதி நடைபெற்றது. வரும் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் மே 4 அம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வருகின்ற 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. வாக்குப்பதிவு, பள்ளிகளில் நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி ஏற்பாடுகளுக்காக 7ஆம் தேதி முதலே விடுமுறை அளிக்கப்படுகிறது.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நடவடிக்கைகள் காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.
இந்த தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள சிபிஎஸ்சி வாரியத் தேர்வுகள் சிபிஎஸ்சி வாரியத்தின் கால அட்டவணைப்படி எந்த மாற்றமும் இன்றி நடைபெறும். சிபிஎஸ்இ தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் திட்டமிட்டபடி தங்கள் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications