கொரோனா அச்சுறுத்தல்.. எல்லைப் பகுதிகளில் இருமாநில போலீஸாருக்குள் மோதல்
புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுச்சேரி எல்லைப் பகுதியில் இருமாநில போலீஸாருக்குள் ஏற்பட்ட மோதலால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரியில் கொரோனா பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக புதுச்சேரி எல்லைகளான கோரிமேடு, காலாப்பட்டு, மதகடிப்பட்டு, முள்ளோடை, திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர் மாவட்டத்துக்கும், புதுச்சேரி மாவட்டத்துக்கும் தொடர்பில் உள்ள வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் மத்திய, மாநில அரசு ஊழியர்களாக பணிபுரியும் பலர் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வசிக்கின்றனர். அதேபோன்று தமிழக அரசு ஊழியர்கள் பலரும் புதுச்சேரியில் வசிக்கின்றனர். இச்சூழலில் தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வருவோரை புதுச்சேரி எல்லையான முள்ளோடையில் புதுச்சேரி போலீஸார் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் அரசு ஊழியர்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அருகேயுள்ள தமிழகப் பகுதியான ரெட்டிச்சாவடியில் கடலூர் டிஎஸ்பி உத்தரவின் பேரில் ரெட்டிச்சாவடி போலீஸார் கடலூர் - புதுச்சேரி பிரதான சாலையில் வந்த புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
புதுச்சேரியினுள் தமிழகப்பகுதி இடை இடையே பின்னிப்பிணைந்துள்ளது. இதனால் இரு மாநில மக்களுக்கும் பிரதான சாலைகள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக புதுச்சேரி எல்லையான முள்ளோடைக்கும் தவளக்குப்பத்துக்கும் இடையே தமிழகப்பகுதியான ரெட்டிச்சாவடி உள்ளது. இதனால் கடலூர் - புதுச்சேரி சாலை பிரதான சாலையாக இருந்து வருகிறது. திடீரென இந்த சாலையில் நடுவே உள்ள தமிழகப்பகுதியான ரெட்டிச்சாவடியில் போலீஸார் வாகனங்களை தடுத்து நிறுத்தியதால் புதுச்சேரியை சேர்ந்த மக்கள், அவசர தேவைக்கு சென்றவர்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகினர்.

சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக இச்சம்பவம் நடைபெற்றது. இது சம்பந்தமாக புதுச்சேரி ஆளுநர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அமைச்சர் கந்தசாமிக்கும் பலர் தொடர்பு கொண்டனர். உடனே அமைச்சர் கந்தசாமி கடலூர் மாவட்ட ஆட்சியர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதைதொடர்ந்து புதுச்சேரி வாகனங்களை ரெட்டிச்சாவடி போலீஸார் அனுமதித்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, இருமாநில போலீஸாருக்குள் ஏற்பட்ட மோதலே இப்பிரச்னைக்கு காரணம் என தெரிவித்தனர். இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, புதுச்சேரி எல்லைபகுதி மூடப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கடலூர் மாவட்ட அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்களை அனுமதிக்கபடுவதில்லை என தெரிகிறது.
இதனால் ரெட்டிச்சாவடி போலீஸார் வேண்டுமென்றே புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். போலீஸாருக்குள் உள்ள மோதலால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். இதுபோன்று சம்பவம் இனி நடக்காமல் இருக்க இருமாநில ஆட்சியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications