ஊரடங்கை தளர்த்த வேண்டாம்.. மன்றாடிக் கேட்கும் மல்லாடி.. கேட்க மறுக்கும் நாராயணசாமி..!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு தளர்வினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரியில் கடந்த 27 தினங்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று நோய் பாதிப்பு இல்லை. புதுச்சேரியியில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரில் 3 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிவிட்டனர்.
மீதி 3 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் 4 தினங்களில் மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அப்போது கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தால் அவர்களும் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.

ரெட் அலர்ட் போகவில்லை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகள் கோரோனா தொற்றுக்கு ரெட் அலர்ட் பகுதியாக இல்லாவிட்டாலும், அவைகளுக்கு அருகில் உள்ள பிற மாநில பகுதிகள் ரெட் அலர்ட் பகுதிகளாகவே உள்ளன. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பொது மருத்துவமனை வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. அதுபோல் சாலையின் பல்வேறு இடங்களில் 50 சதவீத மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கொரோனா பரவ வாய்ப்பு
நிறைய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிமாநிலங்களில் உள்ள ரெட் அலர்ட் பகுதியில் இருந்து அதிகம்பேர் வருவார்கள். இதனால் கொரோனா தொற்று சூழ்நிலை ஏற்படலாம். எனவே ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கான தளர்வை இன்னும் 12 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். கட்டுப்பாட்டு தளர்வு விஷயத்தில் மாநில அரசுகளே தங்களது மாநிலத்துக்கு ஏற்றவகையில் முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே தேவைப்பட்டால் ஊரடங்கு தளர்வு நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.

தொடர்ந்து கண்காணிப்போம்
அமைச்சரை தொடர்ந்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வழக்கம்போல் இயங்கும். குழுக்கள் அமைத்து ஆய்வு செய்ய உள்ளோம். பணிக்கு திரும்பியுள்ள அரசு ஊழியர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனர். சமூக இடைவெளிகளை பின்பற்றுகின்றனர். மருத்துவமனைகளில் டெலிமெடிசின் திட்டத்தையும் அமல்படுத்த உள்ளோம். நோயாளிகளுக்குத் தேவையான உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மருந்துகள் போதிய அளவில் உள்ளது.

பிசிஆர் சோதனை
இப்போது நாள்தோறும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடங்க உள்ளோம். சுகாதார ஊழியர்கள் மூலம் இதுவரை 9 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தி உள்ளோம். அனைவருக்கும் ஒரு சில நாட்களில் சோதனை நடத்தி முடித்து விடுவோம். சோதனைக்காக 10,000 அதிவிரைவு பரிசோதனைக் கருவி ஆர்டர் கொடுத்துள்ளோம். புதுச்சேரி சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு சந்தேகத்தின் பேரில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தினோம். ஆனால் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது என தெரிவித்தார்.

முதல்வர் பிடிவாதம்
சுகாதாரத்துறை அமைச்சர் ஊரடங்கில் தளர்வு அளிக்ககூடாது என வலியுறுத்தி வரும் நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி அதை பரிசீலனை செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசிடமிருந்து கொரோனா நிவாரண நிதி புதுச்சேரி மாநிலத்திற்கு கிடைக்காத காரணத்தினாலும், மாநிலத்தில் தொழில்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தின் வருவாய் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கில் தளர்வு கொடுத்து மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க முதலமைச்சர் நாராயணசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications