சூதாட்ட கிளப்களை தொடங்கும் நாராயணசாமி... முட்டுக்கட்டை போடும் கிரண்பேடி
புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், புதுவையின் வருவாயை பெருக்கும் நோக்கிலும் சூதாட்ட கிளப்களை திறக்க முடிவெடுத்துள்ளார் அம்மாநில முதல்வர் நாராயணசாமி.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சூதாட்டத்தை ஊக்கப்படுத்துவது தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல் ஆற்றக் கூடிய காரியமா என வினவியுள்ளார்.
இதனால் கடந்த ஒரு வாரகாலமாக புதுச்சேரி அரசியலில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

கேசினோ
கோவாவை போல் புதுச்சேரியிலும் கேசினோக்கள் எனப்படும் சூதாட்ட கிளப்களை திறக்கவும், உரிமம் வழங்கவும் முடிவெடுத்துள்ளது அம்மாநில அரசு. இதற்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், சூதாட்ட கிளப்களை திறக்கவிட மாட்டேன் என கோதாவில் குதித்துள்ளார்.

குற்றச்சாட்டு
இதனால் கோபமடைந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கிரண்பேடியை போல் ஒரு ஆளுநர் புதுச்சேரிக்கு தேவையா என்றும், அவர் வருவாயை பெருக்க என்ன செய்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சூதாட்ட கிளப்களை திறந்து அதன் மூலம் அரசுக்கு வருவாயை பெருக்க வேண்டும் என்பதிலும் நாராயணசாமி உறுதியாக உள்ளார்.

அறிவுறுத்தல்
இதனிடையே புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், சூதாட்ட கிளப்கள், மதுபானத் தொழிற்சாலை, லாட்டரி என அரசு கொண்டுவந்தால் அது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாழாக்கிவிடும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு
அரசு ஒரு திட்டத்தை புதிதாக கொண்டுவருகிறது என்றால் அதற்குரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தான் கொண்டு வரும் என்றும், பாஜக ஆளும் மாநிலமான கோவாவுக்கு சென்று கேசினோகளுக்கு எதிராக கிரண்பேடி குரல் கொடுப்பாரா எனவும் நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார். இப்படி அவர்கள் இருவரும் கருத்து மோதலில் ஈடுப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.












Click it and Unblock the Notifications