ஏழை மாணவிகளுக்கு உதவி கரம் நீட்டும் முன்னாள் மாணவிகள்.. தழைக்கும் மனித நேயம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு கல்லூரியின் முன்னாள் மாணவிகள் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி புரிந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழைக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அரசாங்கமும், பல்வேறு சமூக அமைப்புகளும் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதேபோல் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் முன்னாள் மாணவிகள்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 120 பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சங்கத்தினர் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை மாணவிகள், கல்லூரி காவலாளிகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதன் தொடக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி, முன்னாள் மாணவிகள் சங்க தலைவர் ரஜினி சனோலியன் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்து கொண்டு, மாணவிகள், காவலாளிகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு, புளி, மிளகாய், சோப்பு, மாஸ்க் உள்ளிட்டவை அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினர்.

200 ஏழை மாணவிகள் மற்றும் 25 பணியாளர்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல் கல்லூரியில் பணியாற்றும் 32 தொகுப்பூதிய விரிவுரையாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கவும் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications