ஹெல்மெட் இருக்கா? லைசென்ஸ்? வாடகை வாகனங்களை ரோட்டில் நிறுத்தினால் ரூ.10000 அபராதம்.. எங்கேனு பாருங்க
புதுச்சேரி: லைசென்ஸ் இல்லாமல், வாடகைக்கு விடப்படும் இருசக்கர வாகனங்கள் ரூ.10 ஆயிரம் அபராதத்துடன், பறிமுதல் செய்யப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம் என்ன?
புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து பிரிவு சார்பில் டூவீலர்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுரேஷ்பாபு மற்றும் போக்குவரத்து போலீஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் வாடகை விடும் தொழில் செய்வோர் பங்கேற்றனர்.

சுற்றுலா பயணிகள்: கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி பேசும்போது, "சுற்றுலா பயணிகளுக்கு பைக்குகளை வாடகைக்கு விடுவோர் போக்குவரத்து துறையில் அதற்கான பர்மிட் பெற்றிருக்க வேண்டும். தங்களின் வாடகை நிலையங்கள் முன்பு, சாலையில் பைக்குகளை நிறுத்தக்கூடாது. குடோன் அல்லது தொழில் செய்யும் இடத்தில் மட்டுமே வாடகை பைக்குகளை நிறுத்த வேண்டும். சாலையில் நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு தந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பைக் அல்லது ஸ்கூட்டர் வாடகைக்கு பெற்று ஓட்டும் சுற்றுலா பயணிக்கும், பின்னால் உட்கார்ந்திருப்பவருக்கும் கண்டிப்பாக ஹெல்மெட் வழங்க வேண்டும்.... நகரப் பகுதியில் ஒரு வழிப்பாதை இருப்பது தெரியாமல் சுற்றுலா பயணிகள் வலம் வருவதால், வாடகைக்கு பைக் பெறும்போதே, ஒரு வழிப்பாதைகள் குறித்த சிறிய குறிப்பேடு ஒன்றும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
முக்கிய உத்தரவு: இந்நிலையில், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் சில முக்கிய உத்தரவுகளை அறிவித்திருக்கிறார்.. இது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்..
அதில், "புதுச்சேரியின் பல பகுதிகளில் உரிமம் பெறாமல் சிலர் இருசக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு வாடகைக்கு விடுவதாக, போக்குவரத்து துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, சைக்கிள் ஸ்டோர் என்ற பெயரில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடத்தப்படும் இத்தகைய செயல்கள் மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு முரணானது.
நம்பர் பிளேட்: இதுகுறித்து போக்குவரத்து துறை தொடர்ச்சியாக பல முறை எச்சரித்து வந்துள்ளது.. உரிமம் பெற்ற இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பெறுவதற்கான விண்ணப்பங்கள் போக்குவரத்து துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வாடகை மோட்டார் சைக்கிள் உரிமம் பெற விரும்புபவர்கள் தாங்களாக முன் வந்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்து உரிமம் பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
எனவே, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை உரிமம் பெறாமல் வாடகைக்கு விடுவது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட பிரிவு 192ன் படி தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவது மட்டுமின்றி, அபராத தொகையாக ஒரு மோட்டார் சைக்கிளுக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும். அத்தகைய வாகனங்கள் பற்றி முன்னரே அறிந்திராத புதிய நபர்களும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களும் வாடகை வாகனங்களை இயக்கும்போது விபத்துக்களும் ஏற்படுகிறது.
மோட்டார் சைக்கிள்கள்: எனவே, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை போக்குவரத்து துறையின் உரிய உரிமம் பெற்ற பின் வாடகைக்கு விடுமாறு வாகன உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். அவ்வாறு உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் சட்ட விரோத வாகன பயன்பாட்டில் ஈடுபட வேண்டாம்" என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications