ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்
புதுவை: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியும் புதுச்சேரியில் சீட் தருவதற்கு காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. வலுவாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது தளர்ந்துவிட்டதாகவும் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுவையில் கூட்டணியில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு காங்கிரசின் அணுகுமுறை தான் காரணம் என்றும், புதுச்சேரியில் இந்தியா கூட்டணியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சலீம் தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள கட்சிகளே மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருவது புதுவையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விசிக என 26 கட்சிகள் உள்ளன. அதிக கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வதில் திமுகவிற்கு கடும் சவால்கள், நெருக்கடி இருந்தது. இது அத்தனையும் மீறி அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடை நிறைவு செய்துள்ளது திமுக.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து விலகி விடுவதாக கூறி தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வதில் காலம் தாழ்த்தியதே காரணம் என கூறப்பட்டது. தமிழகத்தில் தான் இப்படி என்றால் புதுச்சேரியிலும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் ஏற்பட்ட குழப்பம், சலசலப்பு இப்போது நேரடியாகவே வெளியில் தெரிந்துவிட்டது.
திமுகவும் காங்கிரசுமே போட்டியிடுகிறது
புதுவையில் தமிழகத்தில் தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனால் வேட்புமனுவும் சீக்கிரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றபோதும் கூட தொகுதி பங்கீடு நிறைவடையவில்லை. இதனால் பல தொகுதிகளில் காங்கிரஸ் தரப்பிலும், திமுக தரப்பிலும், விசிக தரப்பிலும் என தனித்தனியாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. பல தொகுதிகளில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணியில் உள்ள கட்சிகளே தனித்தனியாக களம் காண இருக்கின்றன. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இது தொடர்பாக புதுவை காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார் விசிக திருமாவளவன்.
ஸ்டாலின் வலியுறுத்தியும் கேட்கவில்லை
இந்த நிலையில் தான், புதுவையில் வலுவாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது தளர்ந்துவிட்டதாகவும், இது பாஜக வெற்றிக்கு வழிவகுக்கும் என சிபிஎம் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடும் என்று விரும்பினோம்.
ஆனால் புதுவை, காரைக்காலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய கேட்டோம். முதல்வர் ஸ்டாலினும் சிபிஎம்முக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யுங்கள் என கூறினார். ஆனால் திமுக மற்றும் காங்கிரசே 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்ன போதும் அங்கே காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
எங்களுக்கு ஒதுக்கக் கோரி ஒரு தொகுதியை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியும் காங்கிரஸ் அங்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இன்று வலுவான கூட்டணியாக பார்க்கப்பட்ட மதச்சார்பற்ற கூட்டணி வலுவிழந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணி காணாமல் போயிட்டு
இதேபோன்று புதுவையில் கூட்டணியில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு காங்கிரசின் அணுகுமுறை தான் காரணம் என்றும், புதுச்சேரியில் இந்தியா கூட்டணியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சலீம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், புதுவையில் இந்தியா கூட்டணி காணாமல் போயிட்டு.. கூட்டணியில் பல மதசார்ப்பற்ற கட்சிகள் இருந்தாலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே பிரதான கட்சிகள். ஆனால் அந்த இரு கட்சிகளுமே ஒன்றுக்கொன்று போட்டியிடுகிறார்கள். அப்போ இங்கே இந்தியா கூட்டணி எங்கே இருக்கு.. இதற்கு யார் காரணம் என்றால் காங்கிரஸ் தான்.. என்று கூறினார்.












Click it and Unblock the Notifications