புதுவையில் காவி நிறத்தில் பெயர்ப்பலகை.. கருப்பு வண்ணம் பூசி அழித்த மர்ம நபர்களால் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் காவி நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் வழித்தடங்களை குறிக்கும் பலகைகளை கருப்பு மையிட்டு அழித்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
புதுச்சேரி அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை ஒட்டிய பகுதிகளில் புதியதாக தெருக்களின் பெயர்ப் பலகைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் வழித்தடங்களை குறிக்கும் பலகைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

சாலையின் பெயர்கள்
அந்த சாலையின் பெயர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டு திசை காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சாலைகளில் உள்ள சுற்றுலா தலத்தின் இடங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

காவி நிறம்
இந்த பெயர் பலகைகள் காவி நிறத்திலும் எழுத்துகள் வெள்ளை நிறத்திலும் உள்ளன. இந்த காவி நிறத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், இந்நிலையில் நேற்று முன் தினம் இரவோடு இரவாக மர்ம நபர்கள் யாரோ புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவி நிற பெயர் பலகைகளில் கருப்பு மையிட்டு அழித்துள்ளனர்.

புதுவை
புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் காவி மயம் தலைவிரித்து ஆடுவதாக திராவிட கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் காவி நிற பெயர் பலகையை கருப்பு மையிட்டு அழித்த இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பெரியகடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தி திணிப்பு
புதுவையில் அண்மைக்காலமாக இந்தி திணிப்பு மற்றும் பாஜகவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது காவி நிறத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் கருப்பு நிற வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications