மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றணும்.. இல்லைனா கூடுதல் கட்டுப்பாடுகள் போடப்படும்.. தமிழிசை வார்னிங்!
புதுவை: புதுவையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மூலம் 'ஆயுஸ் கவாத்' என்னும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பாக்கெட்டுகளை காவல்துறைக்கு வழங்கும் நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாநில டி.ஜி.பி.யிடம் மருந்து பாக்கெட்களை வழங்கினார்.

இதனைதொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- புதுவையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் அதனை மக்கள் முறையாக பின்பற்றவில்லை.
மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவில்லை எனில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதை தடுக்க முடியாது. கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றாவிட்டால் இருக்கும் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்படும்.
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனை மற்றும் ஏனாம் பகுதியில் உற்பத்தி மையம் துவக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 70 ஆக்சிஜன் செறிவூட்டல் மற்றும் புதுச்சேரி சுகாதாரத் துறைக்கு 40 ஆக்சிசன் செறிவூட்டலை மத்திய அரசு வழங்கி உள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications