மீனை சைவ உணவில் சேர்க்கலாமே.. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சொன்ன அடடே யோசனை! காரணம் இதுதான்
புதுச்சேரி: மீனை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரியுள்ளார். இதன் மூலம் மீனவர்கள் மேலும் பயனடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.
நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மீன் அசைவமாக கருதப்பட்டாலும், மேற்கு வங்கத்தை பொறுத்த அளவில் மீன் சைவம். அம்மாநில மக்கள், அவர்கள் உயர் சமூகமாக இருந்தாலும் சரி, மாற்று சமூகத்தினராக இருந்தாலும் சரி, எந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதில் மீன் இடம்பிடித்திருக்கும். மற்ற மாநில மக்களுக்கு இது வித்தியாசமாக தெரிந்தாலும், மேற்கு வங்கத்தினர் இது குறித்து கவலைப்படுவதில்லை.

இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த அதன் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மீனை சைவ பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றிருந்தனர்.
புதுச்சேரிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிறப்புரையாற்றினார். இவரைத் தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "முட்டை இட்டு கண்களில் வைத்து குஞ்சு பொறித்து வளர்ப்பது போல் மீனாட்சி எப்படி ஆட்சி புரிவாள். அதேபோலதான் மத்திய அரசு தொலைவில் இருந்தாலும் மக்களை கண்ணில் வைத்து பாதுகாத்து வருகிறது.
மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும், நோய்நொடி இல்லாமலும் இருக்கலாம் என மருத்துவர்களும், அறிவியல் ஆய்வுகளும் தொடர்ந்து கூறி வருகிறது. ராஜ் நிவாசில் மேற்கு வங்க நாள் கொண்டாடப்பட்டபோது மீன் சமைக்கப்பட்டது. அப்போது அவர்கள், நாங்கள் மீனை அசைவம் என்று நினைப்பது இல்லை, சைவம் என்று தான் நினைக்கிறோம் என்று குறிப்பிட்டார்கள். அப்படி மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் பயனடைவார்கள்.
புதுச்சேரியை பொறுத்த அளவில் எந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டாலும் அது வரும் காலத்தில் பெரிய திட்டமாக மாற்றப்படும் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.
மீன்பிடித்தல் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மீனவர்கள் குறிப்பிட்ட அளவு பங்காற்றுகின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன் பிடித்தல் என்பது 1.07% பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications