அரசியல் தலையீடு.. ஆன்மிக பூமியான தமிழக கோயில்களின் வரலாறு சிதைக்கப்படுகிறது! அண்ணாமலை
புதுச்சேரி: புதுச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தியா பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்று இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. மத்திய அரசு இந்த 75ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது,
இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் மத்திய அரசு செய்து வருகிறது. டெல்லி செங்கோட்டை முழுக்க முழுக்க போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

புதுச்சேரி
அதேபோல ஒவ்வொரு மாநிலத்தில் பாஜக சார்பில் பிரம்மாண்ட சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதனிடையே 75ஆவது சுதந்திர தினம் மற்றும் அரவிந்தரின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு "பாரத் சக்தி பாண்டி லிட் பெஸ்ட்-2022" என்ற நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார்.

அண்ணாமலை
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பிரதமர் நாடி நமது நாட்டின் 75ஆவது சுதந்திர விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். நமது நாடு இப்போது மிகவும் முன்னேறி உள்ளது. இதற்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் மிகவும் முக்கியமானது.

பிரதமர் மோடி
புதுச்சேரி ஆன்மிக பூமியாகவே திகழ்கிறது. இங்குச் சுதந்திர தாகம் ஆன்மிக எழுச்சி மூலமே தூண்டப்பட்டது. அரவிந்தர் செய்த ஆன்மீக சேவை குறித்து நமது பிரதமர் நரேந்திர மோடியே கூட நினைவு கூர்ந்து இருக்கிறார். அதேபோல தமிழ்நாடும் கூட சுதந்திரப் போராட்டத்திற்காக மாபெரும் தியாகங்களைச் செய்த பல்வேறு தலைவர்களைக் கொண்டு இருக்கிறது. அப்படி சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட தியாகிகளின் வரலாற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

தியாகம்
வேலுநாச்சியார், ஜான்சிராணி உள்ளிட்டோர் எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் நாட்டின் விடுதலைக்காகவே பாடுபட்டனர். இதுபோல சுதந்திர வீரர்களின் தியாகத்தைத் தெரிந்து கொண்டும், புரிந்து கொண்டும் தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது. அவர்களை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையிலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன..

இந்தியா
கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கே இந்தியா தான் சிறந்த முன்னுதாரணமாக இருந்தது. இந்திய மக்கள் அனைவருக்கும் மிக விரைவாக வேக்சின் போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உடலுக்கு முக்கிய யோகா கலையை இந்தியா தான் உலக நாடுகளுக்குக் கொடுத்து இருக்கிறது. திருவள்ளுவரின் கூற்றுப்படி, நாட்டை வழி நடத்தும் சிறந்த நிர்வாகத்தைப் பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.
Recommended Video

சிதைக்கின்றனர்
தமிழ்நாடு மிகச் சிறந்த ஒரு ஆன்மிக பூமி. தமிழகத்தில் மொத்தம் நான்கு லட்சம் கோயில்கள் உள்ளன. அதில் 415 கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரசியல்வாதிகளின் தலையீடுகள் இதில் உள்ளன. இதனால் அந்த கோயில்களின் வரலாறு சிதைக்கப்படுகிறது. இதைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியனாகவும் தமிழனாகவும் இருப்பதில் எனக்குப் பெருமை" என்றார்.












Click it and Unblock the Notifications